வீட்டை சூறையாடிய ஒற்றை காட்டுயானை; வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை
மூடிகெரே அருகே, வீட்டை சூறையாடிய ஒற்றை காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவிற்கு உட்பட்டது குன்ரா கிராமம். இந்த கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் வனப்பகுதியில் இருந்து காட்டுயானை, புலி, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் இரைதேடி ஊருக்குள் நுழைந்து வருவது வழக்கமாக நடந்து வருகிறது.
மேலும் காட்டுயானைகள் அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்து அங்குள்ள பாக்கு, காபிச்செடி போன்ற பயிர்களை நாசப்படுத்தியும் வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டுயானை வெளியேறி ஊருக்குள் நுழைந்துள்ளது.
அந்த ஒற்றை காட்டுயானை கிராமம் அருகே உள்ள காபித் தோட்டத்திற்குள் புகுந்து அங்கிருந்த பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது. மேலும் அந்த காட்டுயானை அதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான வீட்டை சூறையாடியது. மேலும், அவரது வீட்டின் மேற்கூரையை பிடுங்கி எறிந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த கார்த்திக்கின் குடும்பத்தினர் அலறியடித்தபடி வீட்டில் இருந்து வெளியே ஓடினர். பின்னர் அந்த ஒற்றை யானை வீட்டில் இருந்த பொருட்களை நாசம் செய்தது. இதையடுத்து அந்த காட்டுயானை வனப்பகுதிக்குள் சென்று விட்டது. இதையடுத்து கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.
அந்த தகவலின் பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டனர். அவர்களிடம் கிராம மக்கள் காட்டுயானைகளை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். காட்டுயானை அட்டகாசத்தால் அந்த கிராம மக்கள் பீதியில் உள்ளனர்.