பீகாரில் தொடர் அதிர்ச்சி; 2 கி.மீ. தொலைவு ரெயில் தண்டவாளம் திருட்டு
பீகாரில் 2 கி.மீ. தொலைவு உள்ள ரெயில் தண்டவாளங்களை மர்ம நபர்கள் பெயர்த்து, திருடி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.
பாட்னா,
பீகாரின் சமஸ்திப்பூர் மாவட்டத்தில் மதுபானி நகரில் பந்தோல் ரெயில் நிலையத்தில் இருந்து லோஹத் சர்க்கரை ஆலை வரையில் 2 கி.மீ. தொலைவுக்கு சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ரெயில் தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
ஆனால், சர்க்கரை ஆலை மூடப்பட்டதும் இந்த தண்டவாள பகுதி பல ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் இருந்து உள்ளது. இந்நிலையில், 2 கி.மீ. தொலைவு தண்டவாள பகுதியை யாரோ மர்ம நபர்கள் பல்வேறு கால கட்டங்களில் திருடி சென்று விட்டனர்.
இதுபற்றி அறிந்ததும் சமஸ்திப்பூர் ரெயில்வே வாரியம், தனது 2 ஊழியர்களை சஸ்பெண்டு செய்து உள்ளது. இதன்படி, ஜன்ஜார்பூர் அவுட்போஸ்ட் பகுதியின் பொறுப்பாளரான ஸ்ரீனிவாஸ் மற்றும் மதுபானி நகரின் உதவியாளர் பணியில் இருந்த முகேஷ் குமார் சிங் ஆகிய 2 பேர் சஸ்பெண்டு ஆனார்கள். குற்றவாளிகளை கண்டுபிடிக்க கண்காணிப்பு குழு அமைக்கப்பட்ட துறை சார்ந்த விசாரணை நடந்து வருகிறது.
ரெயில்வே அதிகாரிகள் துணையுடனேயே இந்த திருட்டு நடந்திருக்க கூடும். இதுவரை யாரையும் கண்டறிய முடியவில்லை. எனினும், விசாரணை நடந்து வருகிறது. இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவும் செய்யப்பட்டு உள்ளது என ரெயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேபோன்று பாட்னா நகரில் கடந்த ஜனவரி 19-ந்தேதி, அதிகாரிகள் என கூறி கொண்டு சப்ஜிபாக் பகுதியில் இருந்த மொபைல் கோபுரம் ஒன்றை மர்ம நபர்கள் எடுத்து சென்று விட்டனர். அதனை ஆய்வு செய்ய சென்றபோதே திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. கடந்த நவம்பரில் ரெயில் என்ஜின் ஒன்று திருடு போன சம்பவமும் நடந்து உள்ளது.
கடந்த காலத்தில் 60 அடி நீள ஸ்டீல் பாலம் ஒன்றும் பீகாரில் திருடப்பட்ட சம்பவம் கடந்த காலத்தில் வெளிவந்து அதிர்ச்சி ஏற்படுத்தி இருந்தது. இதுபோன்று அந்த மாநிலத்தில் பெரிய அளவிலான இலக்கை கொண்டே அவ்வப்போது திருட்டு சம்பவங்கள் நடப்பது மக்களிடையே அதிர்ச்சி கலந்த அச்சம் ஏற்படுத்தி உள்ளது.