தரிகெரேயில் பயணிகள் கூட்டத்திற்குள் தனியார் பஸ் புகுந்து பள்ளி மாணவி சாவு


தரிகெரேயில்  பயணிகள் கூட்டத்திற்குள் தனியார் பஸ் புகுந்து பள்ளி மாணவி சாவு
x
தினத்தந்தி 8 Sept 2023 12:15 AM IST (Updated: 8 Sept 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

தரிகெரே அருகே சாலையோரம் நின்ற பயணிகள் கூட்டத்திற்குள் தனியார் பஸ் புகுந்த விபத்தில் பள்ளி மாணவி இறந்தாள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

சிக்கமகளூரு-

தரிகெரே அருகே சாலையோரம் நின்ற பயணிகள் கூட்டத்திற்குள் தனியார் பஸ் புகுந்த விபத்தில் பள்ளி மாணவி இறந்தாள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

பயணிகள் கூட்டத்திற்குள் புகுந்த தனியார் பஸ்

சிக்கமகளூரு மாவட்டம் தரிகெரே தாலுகா சீதாபுரத்தை சேர்ந்தவர் மஞ்சு. இவரது மனைவி லதா. இவர்களது மகள் துளசி (வயது 14). இவள் தரிகெரேயில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில் துளசி மற்றும் அந்தப்பகுதியை சேர்ந்த நிவேதிதா (14) ஆகியோர் உள்பட 5 மாணவிகள் பள்ளிக்கு செல்வதற்காக காலை 9 மணி அளவில் காவலுதுக்லாபுராவில் பஸ்சுக்காக காத்திருந்தனர். அவர்களுடன் பொதுமக்கள் சிலரும் பஸ்சுக்காக காத்து நின்றனர்.

அந்த சமயத்தில் அந்த வழியாக வேகமாக வந்த தனியார் பஸ் ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நின்ற மாணவிகள் உள்பட பயணிகள் மீது மோதியது. அத்துடன் அந்த பஸ் அங்குள்ள டீக்கடை மீது மோதி நின்றது.

மாணவி சாவு

இந்த விபத்தில் பஸ் மோதியதில் மாணவி துளசி பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். மேலும் துளசியின் அருகில் நின்ற நிவேதிதா உள்பட 4 மாணவிகள் பலத்த காயம் அடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக தரிகெரே அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவர்களில் நிவேதிதா மேல் சிகிச்சைக்காக சிவமொக்கா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டாள். அங்கு அவளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, விபத்துக்கு காரணமாக தனியார் பஸ்சை அந்தப்பகுதி மக்கள் அடித்து நொறுக்கி ஆத்திரத்தை வெளிபடுத்தினர்.

டிரைவர் கைது

இதுபற்றிய தகவல் அறிந்ததும் தரிகெரே போலீசார் விரைந்து வந்து பலியான துளசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.



Next Story