பெங்களூருவில் தபால்துறை மூலமாக வீடுகளுக்கு இட்லி, தோசை மாவு வினியோகிக்கும் திட்டம்
பெங்களூருவில் தபால்துறை மூலமாக பொதுமக்களின் வீடுகளுக்கே இட்லி, தோசை மாவு பாக்கெட்டுகளை வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது.
பெங்ளூரு:
இட்லி, தோசை மாவு வினியோகம்
தபால்துறை மூலமாக மக்களின் வீடுகளுக்கே தபால்கள், பிற பார்சல்கள் கொண்டு வந்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கா்நாடகத்தில் தபால்துறை மூலமாக வீடுகளுக்கே இட்லி, தோசை மாவு உள்ளிட்ட உணவு பொருட்களை வினியோகிக்கும் திட்டம் தொடங்க உள்ளது. இதற்காக கர்நாடக தபால்துறை, ஹள்ளிமனே நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, வருகிற 18-ந் தேதியில் இருந்தே இந்த திட்டம் தொடங்கப்பட இருப்பதாக தபால்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இட்லி, தோசை மாவுடன், உடடினயாக சமைத்து சாப்பிடும் உணவு பொருட்களையும் தபால்துறை பொதுமக்களின் வீடுகளுக்கு நேரடியாக கொண்டு வந்து கொடுக்க உள்ளது. இதுகுறித்து கர்நாடக தபால்துறை தலைமை அதிகாரியான ராஜேந்திரகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
மக்களின் வீடுகளுக்கு மட்டும்...
தபால்துறையும், ஹள்ளிமனே நிறுவனமும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி வீடுகளுக்கே வந்து இட்லி, தோசை மாவு மற்றும் உணவு பொருட்களை வீடுகளுக்கே வினியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. பொதுமக்களிடம் இருந்து ஆர்டர்களை எடுப்பது, உணவு பொருட்களை பாக்கெட்டுகளை மாற்றி பார்சல் செய்வது, பொதுமக்களின் முகவரியை கொடுப்பது ஹள்ளிமனே நிறுவனத்தின் முழு பொறுப்பாகும். தபால் துறை அந்த உணவுகளை மக்களின் வீடுகளுக்கு மட்டும் கொண்டு செல்லும். பெங்களூருவில் முதற்கட்டமாக இந்த திட்டத்தை தொடங்குகிறோம்.
வரும் நாட்களில் மற்ற நிறுவனங்ககளுடன் இணைந்து மற்ற பொருட்களையும் பொதுமக்களின் வீடுகளுக்கு கொண்டு சேர்க்க தபால்துறை நடவடிக்கை எடுக்கும். உணவு பொருட்கள், வாடிக்கையாளர்களின் தகவல்களை ஒரு நாளுக்கு முன்பாகவே தெரிவிக்கும்படி அந்த நிறுவனத்துடன் கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.