வாகன நெரிசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு-துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்
பெங்களூருவில் வாகன நெரிசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
பெங்களூரு:-
தொழில் முதலீடுகள்
கர்நாடக தொழில்நுட்ப மாநாடு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கலந்து கொண்டு மாநாட்டை தொடங்கி வைத்து பேசியதாவது:-
கர்நாடகத்தில் உறுதியான அரசு உள்ளது. இந்தியாவை கர்நாடகம் மூலம் பார்க்கிறார்கள். கர்நாடகம் திறமையான மனிதவளத்தை கொண்டுள்ளது. உங்களின் ஆதரவு இருந்தால் நாம் இழந்துள்ள கண்ணியத்தை மீட்டு கொண்டு வருவோம். பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற பகுதிகளிலும் தொழில் முதலீடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை நாங்கள் எங்களின் தேர்தல் அறிக்கையிலும் கூறியுள்ளோம்.
வேற்றுமையில் ஒற்றுமை
நீங்கள் அரசுக்கு அதிக பலத்தை வழங்க வேண்டும். 100 நாட்களில் நாங்கள் மக்களுக்கு கொடுத்த முக்கியமான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம். அடுத்த 100 நாட்களில் இன்னும் எந்தெந்த திட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்று திட்டமிட்டுள்ளோம். கர்நாடகம் அனைத்து துறைகளிலும் முன்னிலையில் இருக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம்.
வேற்றுமையில் ஒற்றுமையை கொண்டுள்ள நகரம் பெங்களூரு. இது ஆரோக்கியமான நகரம். கர்நாடகத்தின் மொத்த மக்கள்தொகையில் 34 சதவீதம் பெங்களுருவில் உள்ளது. 'பிராண்டு' பெங்களூரு திட்டத்திற்கு 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆலோசனைகள் பொதுமக்களிடம் இருந்து வந்துள்ளன. பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. நேரம் மிக முக்கியமானது. இந்த வாகன நெரிசல் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்போம்.
சூரியசக்தி மின் உற்பத்தி
நான் மின்சாரத்துறை மந்திரியாக இருந்தபோது மாநிலத்தில் தினமும் 10 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டது. காங்கிரஸ் ஆட்சி காலம் முடிவடைவதற்குள் அதனை 23 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரித்தோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய சூரியசக்தி மின் உற்பத்தி பூங்காவை துமகூருவில் அமைத்துள்ளோம். இந்த திட்டத்திற்கு நிலத்தை கையகப்படுத்தாமல் திட்டத்தை அமல்படுத்தியுள்ளோம்.
கர்நாடகத்தில் புதிய தகவல் தொழில்நுட்ப கொள்கை வகுக்கப்படும். அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பது எங்களின் விருப்பம். இது மட்டுமின்றி பள்ளி கல்வி, உயர்கல்வி போன்ற துறைகளிலும் புரட்சிகரமான மாற்றங்களை கொண்டு வர நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் பேசினார்.