நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி; காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற மருத்துவ அதிகாரி


நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி;  காரில் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற மருத்துவ அதிகாரி
x
தினத்தந்தி 28 Jun 2023 12:15 AM IST (Updated: 28 Jun 2023 4:59 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு அருகே நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை காரில் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ அதிகாரி அழைத்து சென்றார்.

சிக்கமகளூரு-

சிக்கமகளூரு அருகே நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை காரில் ஆஸ்பத்திரிக்கு மருத்துவ அதிகாரி அழைத்து சென்றார்.

நிறைமாத கர்ப்பிணி

சிக்கமகளூரு மாவட்டம் அஜ்ஜாம்புரா தாலுகா கடிரங்காபுரா கிராமத்தை சேர்ந்தவர் யசோதா. இவர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். இதற்காக, அஜ்ஜாம்புராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் யசோதா பரிசோதனை செய்து வந்தார். இந்த நிலையில், அஜ்ஜாம்புரா தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் பரிசோதனைக்காக யசோதா தனது உறவினர்களுடன் சென்றார். அப்போது அவரை டாக்டர் பரிசோதனை செய்தார்.

அப்போது, அவர் பிரசவம் பார்ப்பதற்கு ரூ.30 ஆயிரத்திற்கு மேல் செலவு ஆகும் என கூறியுள்ளார். மேலும் யசோதாவின் உடம்பில் ரத்தம் குறைவாக உள்ளது என அவர் கூறியுள்ளார்.

பிரசவ வலி

யசோதாவிடம் ரூ.30 ஆயிரம் இல்லாததால் என்ன செய்வது என திகைத்தார். இந்தநிலையில், சிவமொக்காவில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் பிரசவம் பார்க்கலாம் என உறவினர்கள் யசோதாவை பஸ்சில் அழைத்து சென்றனர். பஸ் தரிகெரே பஸ் நிலையம் சென்றது. அப்போது அவர் மற்றொரு பஸ் மாறி செல்வதற்கு தனது உறவினர்களுடன் சாலையை கடக்க முயன்றார்.

அப்போது யசோதாவிற்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் நடுரோட்டில் பிரசவ வலி அதிகமாகி துடித்து கொண்டு இருந்தார். அப்போது காரில் தரிகெரே அரசு ஆஸ்பத்திரி மருத்துவ அதிகாரியும், எலும்பியல் டாக்டருமான தேவராஜ் வந்தார்.

பெண் குழந்தை பிறந்தது

அவர் நடுரோட்டில் பிரசவ வலியால் துடித்து கொண்டு இருந்த கர்ப்பிணியை உடனடியாக அழைத்து கொண்டு தரிகெரே அரசு ஆஸ்பத்திரியில் பிரசவத்திற்காக சேர்த்தார். அங்கு அவருக்கு மகப்பேறு டாக்டர் நட்ராஜ் பிரசவம் பார்த்தார். இதையடுத்து யசோதாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும்-சேயும் நலமாக உள்ளனர் என டாக்டர்கள் தெரிவித்தனர். சாலையோரம் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டாக்டர் ஆஸ்பத்திரியில் சேர்த்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சம்பவத்திற்கு பலர் டாக்டருக்கு பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.


Next Story