சொந்த உழைப்பில் உருவான விமானம்... குடும்பத்துடன் உலக நாடுகளை சுற்றும் கேரளவாசி


சொந்த உழைப்பில் உருவான விமானம்... குடும்பத்துடன் உலக நாடுகளை சுற்றும் கேரளவாசி
x

நன்றி:  தமரக்சன் பேஸ்புக் பதிவு

கேரளாவை சேர்ந்த அசோக் அலிசெரில் தமரக்சன் என்பவர் 4 பேர் அமர கூடிய விமானம் ஒன்றை 18 மாத உழைப்பில் உருவாக்கி உள்ளார்.



ஆலப்புழா,



கேரளாவை சேர்ந்த என்ஜினீயர் அசோக் அலிசெரில் தமரக்சன் (வயது 38). இவரது மனைவி அபிலாஷா. இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். அசோக், முன்னாள் எம்.எல்.ஏ.வான ஏ.வி. தமரக்சனின் மகன். கடந்த 2006ம் ஆண்டு இங்கிலாந்து நாட்டுக்கு தனது மனைவியுடன் சென்ற அசோக் லண்டனில் வசித்து வருகிறார்.

கொரோனா பெருந்தொற்று பரவிய காலத்தில் புதிய விமானம் ஒன்றை உருவாக்க அசோக் திட்டமிட்டு உள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, 2018ம் ஆண்டு விமானிக்கான உரிமம் வாங்கினேன். அதன்பின்பு, வாடகைக்கு 2 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்தில் சென்று வந்தேன்.

எனது குடும்பத்தில் உறுப்பினர்கள் அதிகரித்ததும், அதனை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. எனது பயணத்தில் குடும்பத்தினரும் உடன் வருவதற்கு, எனக்கு 4 இருக்கைகள் கொண்ட விமானம் தேவை என உணர்ந்தேன்.

ஆனால், அதுபோன்ற விமானங்கள் கிடைப்பது அரிது. இதனால் புதிய விமானம் ஒன்றை நாமே உருவாக்கலாமே என நினைத்தேன். அதற்கான முயற்சிகளை மேற்கொண்டேன்.

ஜோகன்னஸ்பர்க்கை அடிப்படையாக கொண்ட ஸ்லிங் என்ற விமான நிறுவனம், 2018ம் ஆண்டில் ஸ்லிங் டி.எஸ்.ஐ. என்ற பெயரிடப்பட்ட விமானம் ஒன்றை அறிமுகப்படுத்தியது. இதனால், அதன் தொழிற்சாலைக்கு சென்று பார்வையிட்டேன்.

எனது சொந்த விமானம் உருவாக்கத்திற்கு தேவையான உபகரணங்களை வாங்கினேன். கொரோனாவால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டபோது, புதிய விமானம் உருவாக்குவதற்கு அதிக நேரம் கிடைத்தது என அவர் கூறுகிறார்.

அவரது மனைவி அபிலாஷா கூறும்போது, எங்களுக்கு சொந்த விமானம் எப்போதும் தேவை என நன்றாக தெரியும். அதனால், முதல் ஊரடங்கின்போது, பணம் சேமிக்க தொடங்கினோம். முதல் சில மாதங்களில் நிறைய பணம் சேமித்து இருந்தோம். எனவே, அதனை பயன்படுத்துவது என முடிவு செய்தோம் என அவர் கூறியுள்ளார்.

இந்த விமானம் உருவாக, இந்திய பண மதிப்பின்படி ரூ.1.8 கோடி செலவிடப்பட்டு உள்ளது. புதிய விமானம் உருவானதும் அதற்கு தனது இளைய மகளான தியாவின் பெயரை கொண்டு, ஜி-தியா என அவர் பெயர் சூட்டியுள்ளார்.

முதன்முறையாக நடப்பு ஆண்டு பிப்ரவரியில் தமரக்சன், சொந்த உழைப்பின் உருவான புதிய விமானத்தில் பயணம் மேற்கொண்டார். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நாமே உருவாக்கிய விமானத்தில் பயணிப்பதில் எந்த பிரச்சனையுமில்லை என அவர் கூறுகிறார்.

ஒற்றை என்ஜின் கொண்ட ஸ்லிங் சி ரக விமானத்தில் தனது மனைவி மற்றும் இரு மகள்களுடன் ஜெர்மனி, ஆஸ்திரியா மற்றும் செக் குடியரசு ஆகிய நாடுகளுக்கு அவர் பயணம் மேற்கொண்டுள்ளார். தற்போது, விடுமுறையை கொண்டாட தமரக்சன் கேரளாவிற்கு வருகை தந்துள்ளார்.


Next Story