கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்றபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலைவெறி தாக்குதல்


கஞ்சா விற்பனை கும்பலை பிடிக்க சென்றபோது போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலைவெறி தாக்குதல்
x
தினத்தந்தி 25 Sept 2022 12:15 AM IST (Updated: 25 Sept 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்ய சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது.

கலபுரகி:

கஞ்சா பயிரிடும் கும்பல்

கலபுரகி மாவட்டம் கமலாப்புரா போலீசார் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நவீன் என்பவரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்திய போது பீதர் மாவட்ட எல்லையில் மராட்டிய மாநிலத்தில் உள்ள உம்காரில் உள்ள ஒரு கிராமத்தில் கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்படுவதாகவும், அங்கிருந்து கஞ்சாவை வாங்கி வந்து விற்பதாகவும் கூறினார்.

இதனால் கஞ்சா பயிரிடும் கும்பலை பிடிக்க கலபுரகி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் இல்லால் தலைமையிலான போலீசார் உம்காருக்கு நேற்று முன்தினம் இரவு சென்று இருந்தனர். இதையடுத்து கஞ்சா பயிரிட்டு வளர்க்கப்பட்டு வரும் தோட்டத்தில் போலீசார் நின்று கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த 30 பேர் கும்பல் இரும்பு கம்பி உள்ளிட்ட ஆயுதங்களால் போலீஸ்காரர்களை தாக்கியது.

கொலைவெறி தாக்குதல்

இதனால் போலீஸ்காரர்கள் தப்பி ஓடினர். ஆனால் அந்த கும்பலிடம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் மட்டும் சிக்கி கொண்டார். அவர் மீது 30 பேர் கும்பல் கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பி சென்றது. உயிருக்கு போராடிய ஸ்ரீமந்த்தை உம்கார் போலீசார், கர்நாடக போலீசார் இணைந்து மீட்டு பசவகல்யாணில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக கலபுரகியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆனால் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீமந்த்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து கலபுரகி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு இஷா பந்த் நிருபர்களிடம் கூறும்போது, 'சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்ரீமந்த் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. அவர் மீது தாக்குதல் நடத்திய கும்பலை விரைவில் கைது செய்வோம்' என்றார்.


Next Story