பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை 2 நாளில் வழங்க வேண்டும்; அரசியல் கட்சிகளுக்கு, தலைமை கமிஷனர் உத்தரவு
பெங்களூருவில் 28 சட்டசபை தொகுதிகளுக்கான பூத் ஏஜென்டுகளின் பட்டியலை அரசியல் கட்சிகள் இன்னும் 2 நாட்களில் வழங்க வேண்டும் மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டுள்ளார்.
பெங்களூரு:
அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை
பெங்களூரு மாநகராட்சியில் உள்ள 28 தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியல் சரி பார்ப்பது தொடர்பாக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தேர்தல் அதிகாரியும், மாநகராட்சி தலைமை கமிஷனருமான துஷார் கிரிநாத் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில். பல்வேறு அரசியல் கட்சிகளின் சார்பில் முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
28 தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள் பட்டியல் பரிசீலனை முதலில் நடத்தப்பட்டது. குறிப்பாக வாக்காளர்களின் தகவல்களை திருடியதாக கூறப்படும் சிவாஜிநகர், மகாதேவபுரா, சிக்பேட்டை தொகுதிகளின் வாக்காளர்கள் பட்டியல் குறித்து பரிசீலனை நடத்தப்பட்டதுடன், வீடு வீடாக சென்று வாக்காளர்களின் பெயர்கள் சரி பார்த்தது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
2 நாட்களுக்குள் பட்டியல்...
குறிப்பாக 28 தொகுதிகளுக்கு பூத் ஏஜென்டுகளை நியமிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பல்வேறு தொகுதிகளுக்கு அரசியல் கட்சிகள் ஏஜென்டுகள் நியமிக்கப்படாமலுமி, அதன் பட்டியலை மாநகராட்சிக்கு வழங்காமல் இருந்தது குறித்தும் கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதையடுத்து, 28 தொகுதிகளிலும் உள்ள ஒவ்வொரு கட்சியின் பூத் ஏஜென்டுகள் பற்றிய பட்டியலை இன்னும் 2 நாட்களில் வழங்க வேண்டும் என்று தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் உத்தரவிட்டார்.
அத்துடன் 28 தொகுதிகளுக்கு பூத் மட்டத்திலான தேர்தல் அதிகாரி (பி.எல்.ஓ) நியமிக்கப்பட்டு இருப்பது, அவர்கள் அடங்கிய தகவல்கள் மாநகராட்சியின் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளிடம், தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் தெரிவித்துள்ளளார்.