கெஜ்ஜனஹள்ளியில் மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது


கெஜ்ஜனஹள்ளியில்  மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை கூண்டில் சிக்கியது
x
தினத்தந்தி 6 Sep 2023 6:45 PM GMT (Updated: 6 Sep 2023 6:46 PM GMT)

கெஜ்ஜனஹள்ளி கிராமத்தில், மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இரும்பு கூண்டில் சிக்கியது.

சிவமொக்கா-

கெஜ்ஜனஹள்ளி கிராமத்தில், மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை இரும்பு கூண்டில் சிக்கியது.

சிறுத்தை நடமாட்டம்

சிவமொக்கா மாவட்டம் கெஜ்ஜனஹள்ளி கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கெஜ்ஜனஹள்ளி கிராமத்திற்குள் சிறுத்தை புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. மேலும் கிராமத்தில் உள்ள நாய்கள், ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை சிறுத்தை அடித்து கொன்று வருகிறது. இதனால் கிராம மக்கள் பீதியில் இருந்து வந்தனர்.

மேலும், கிராம மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கி உள்ளனர். இதையடுத்து அவர்கள் சிறுத்தையை இரும்பு கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற வனத்துறையினர் கெஜ்ஜனஹள்ளி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர்.

உயிரியல் பூங்காவுக்கு...

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் வனப்பகுதியில் இருந்து இரை தேடி வெளியே வந்த சிறுத்தை, அந்த இரும்பு கூண்டில் சிக்கிக் கொண்டது. இதுபற்றி அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து அந்த சிறுத்தையை மீட்டு தியாவரேகொப்பா வன சரணாலய பகுதியில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'இரும்பு கூண்டில் சிக்கியது பெண் சிறுத்தை ஆகும். அதற்கு 4 முதல் 5 வயது இருக்கும். இந்த சிறுத்தை தான் கிராம மக்களை அச்சுறுத்தி வந்தது. இதுதவிர வேறு ஏதேனும் சிறுத்தை இருக்கிறதா? என்று கிராமத்தையொட்டி வனப்பகுதியில் சோதனை செய்து வருகிறோம்' என்றார்.


Next Story