தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டது; கிராம மக்கள் மகிழ்ச்சி


தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டது; கிராம மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 3 Oct 2022 12:15 AM IST (Updated: 3 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

குந்தாப்புரா அருகே தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டது. இதனால் கிராம மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மங்களூரு;

சிறுத்தை அட்டகாசம்

உடுப்பி மாவட்டம் குந்தாப்புரா தாலுகா தேக்கட்டே கிராமம் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளாக சிறுத்தைகள் தொடர்ந்து அட்டகாசம் ெசய்து வருகின்றன. மேலும் அவ்வப்போது வனத்துறையினர் கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடித்து வந்தாலும், வேறு சிறுத்தைகள் கிராமத்தில் புகுந்து ஆடு, மாடு, கோழிகளை அடித்து கொன்று அட்டகாசம் செய்து வருகிறது.

கடந்த ஏப்ரல் மாதமும் அந்தப்பகுதியில் ஒரு சிறுத்தையை வனத்துறையினர் பிடித்தனர். இதனால் சற்று நிம்மதியில் கிராம மக்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக மற்றொரு சிறுத்தை கிராமத்தில் புகுந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது.

இரும்பு கூண்டு வைத்தனர்

அந்த சிறுத்தை கிராமத்தில் புகுந்து நந்திகேஸ்வரர் கோவில், பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சர்வ சாதாரணமாக சுற்றி வருகிறது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவே பயப்படுகிறார்கள். மேலும், அந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்தனர்.

அதன்பேரில் வனத்துறையினர் சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணித்து கடந்த 8-ந்தேதி வனப்பகுதியையொட்டி இரும்பு கூண்டு ஒன்றை வைத்தனர். மேலும் அதனுள் நாய் ஒன்றையும் இரையாக கட்டி இருந்தனர்.

பிடிபட்டது

இந்த நிலையில் நேற்று முன்தினம் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய அந்த சிறுத்தை, கூண்டில் இரையாக இருந்த நாயை வேட்டையாட முயன்றது. அப்போது அந்த சிறுத்தை இரும்பு கூண்டுக்குள் வசமாக சிக்கிக் கொண்டது. இதுபற்றி அறிந்ததும் அந்தப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர்.

பின்னர் வனத்துறையினர், இரும்பு கூண்டுடன் சிறுத்தையை லாரியில் ஏற்றி அங்கிருந்து கொண்டு சென்றனர். மேலும் அந்த சிறுத்தையை அடர்ந்த வனப்பகுதியில் விடுவதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

6-வது சிறுத்தை...

இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தேக்கட்டே கிராமத்தில் கடந்த 6 ஆண்டுகளில் பிடிபட்ட 6-வது சிறுத்தை இதுவாகும். ஏற்கனவே கடந்த 2018-ம் ஆண்டு ஒரு சிறுத்தையும், 2019-ம் ஆண்டு 3 சிறுத்தையும் கடந்த ஏப்ரல் மாதம் ஒரு சிறுத்தையும் பிடிக்கப்பட்டிருந்தது. தற்போது ஒரு சிறுத்தை பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ளதா என்பது குறித்து கண்காணித்து வருகிறோம் என்றார்.

தொடர் அட்டகாசம் செய்து வந்த சிறுத்தை பிடிபட்டதால் அந்தப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story