பசுமாட்டை வேட்டையாடி கொன்ற சிறுத்தை; கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினாிடம் கோரிக்கை


பசுமாட்டை வேட்டையாடி கொன்ற சிறுத்தை;  கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினாிடம் கோரிக்கை
x

மூடிகெரேயில் பசுமாட்டை வேட்டையாடி கொன்ற சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகா கண்ணிகெரே கிராமம் வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இதனால் அந்த வனப்பகுதியில் இருந்து சிறுத்தை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் அந்த கிராமத்தை சேர்ந்த விவசாயி பசவராஜ் என்பவர், தனக்கு சொந்தமான பசுமாட்டை வனப்பகுதியையொட்டி உள்ள தோட்டத்தில் மேய்ச்சலுக்கு விட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய சிறுத்தை ஒன்று, பசுமாடு மீது பாய்ந்து தாக்கியது.

பின்னர் அந்த சிறுத்தை பசுமாட்டை வேட்டையாடி கொன்று பாதி இறைச்சியை சாப்பிட்டுவிட்டு வனப்பகுதிக்குள் ஓடிவிட்டது. இந்த நிலையில் பசுமாட்டை அழைத்து வர பசவராஜ் தோட்டத்துக்கு சென்றார். அப்போது, பசுமாடு செத்து கிடப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் சிறுத்தை தாக்கி பசுமாடு செத்தது தெரியவந்தது. இதுபற்றி அறிந்ததும் வனத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது அந்தப்பகுதி மக்கள், தொடர் அட்டகாசம் செய்து வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story