பிறந்த நாள் கொண்டாட ஆன்லைனில் வாங்கிய கேக் சிறுமிக்கு எமனாக மாறிய அவலம்


பிறந்த நாள் கொண்டாட ஆன்லைனில் வாங்கிய கேக் சிறுமிக்கு எமனாக மாறிய அவலம்
x
தினத்தந்தி 31 March 2024 10:19 AM IST (Updated: 31 March 2024 10:25 AM IST)
t-max-icont-min-icon

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு பின், இரவு 10 மணியளவில், சிறுமி உள்பட மொத்த குடும்பத்திற்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

பாட்டியாலா,

பஞ்சாப்பின் பாட்டியாலா நகரில் தன்னுடைய இளைய சகோதரி, பெற்றோர் மற்றும் தாத்தாவுடன் ஒன்றாக வசித்து வந்த சிறுமி மான்வி (வயது 10). கடந்த வாரம் இவருக்கு பிறந்த நாள் வந்துள்ளது. இதனை முன்னிட்டு, ஆன்லைனில் கேக் வாங்கி, கொண்டாட முடிவானது. இதன்படி, இரவு 7 மணியளவில் மெழுகுவர்த்தி ஏற்றி, கேக் வெட்டி குடும்பத்தினர் கொண்டாடியுள்ளனர்.

ஆனால், அடுத்த சில மணிநேரங்களில் நடக்க போகும் விபரீதம் பற்றி அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. இரவு 10 மணியளவில், சிறுமி உள்பட மொத்த குடும்பத்திற்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுபற்றி சிறுமியின் தாத்தா ஹர்பன் லால் கூறும்போது, சகோதரிகள் இருவருக்கும் வாந்தி ஏற்பட்டது. அதிக தாகம் ஏற்படுகிறது. வாயெல்லாம் வறண்டதுபோல் இருக்கிறது. குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கேட்டு வாங்கி குடித்து விட்டு சிறுமி மான்வி தூங்க சென்று விட்டாள் என்றார்.

அடுத்த நாள் காலை சிறுமியின் உடல்நலம் மோசமடைந்தது. இதனால், சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மான்விக்கு பிராணவாயு அளிக்கப்பட்டது. ஈ.சி.ஜி. பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், சிறுமியை காப்பாற்ற முடியவில்லை. சிறுமி உயிரிழந்து விட்டார் என மருத்துவர்கள் தெரிவித்து உள்ளனர்.

கேக் கன்ஹா என்ற கடையில் இருந்து ஆன்லைன் வழியே ஆர்டர் செய்யப்பட்டு, கேக் வாங்கப்பட்டு உள்ளது. அந்த கேக்கில் சில விஷ பொருட்கள் கலந்துள்ளன என குடும்பத்தினர் குற்றச்சாட்டாக கூறுகின்றனர். இதுபற்றி எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. கேக்கின் மாதிரி பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளது. இதன் முடிவு வந்த பின்னரே மற்ற விசயங்கள் தெரிய வரும் என்று குடும்பத்தினர் தெரிவித்தனர்.


Next Story