ஒரு விரல் புரட்சி... சத்தீஷ்காரில் 93 வயதில் முதன்முறையாக வாக்களிக்க உள்ள முதியவர்
சத்தீஷ்காரில் தன்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக 93 வயதில் முதியவர் ஒருவர் வாக்களிக்க உள்ளார்.
காங்கர்,
சத்தீஷ்காரில் நடப்பு ஆண்டில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தலில் வாக்களிக்கும் நபர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது.
இந்நிலையில், நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் கொண்ட கான்கர் மாவட்டத்தில் கலெக்டர் பிரியங்கா சுக்லா தலைமையில் வீடு, வீடாக சென்று பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
இதன்படி, பைன்சாகன்ஹார் கிராமத்தில் வசித்து வரும் ஷேர் சிங் ஹெத்கோ (வயது 93) என்ற முதியவர், பானுபிரதாப்பூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
இதனால், தன்னுடைய வாழ்நாளில் முதன்முறையாக 93 வயதில் இந்த சட்டசபை தேர்தலில் அவர் வாக்களிக்க உள்ளார். கடந்த பல ஆண்டுகளாக ஆவணங்களில் உள்ள குளறுபடிகள் உள்ளிட்ட காரணங்களால், அவருடைய பெயர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் அவருடைய பெயர் சேர்க்கப்பட்ட மகிழ்ச்சியில் ஷேர் சிங் உள்ளார். அவர் சரிவர பேச முடியாத நிலையில் உள்ளார். எனினும், ஜனநாயக கடமையாற்றி, தன்னுடைய பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் ஆவலில் சிங் உள்ளார் என அவருடைய உறவினர்கள் கூறுகின்றனர்.