வாகனம் மோதி கழுதைப்புலி செத்தது
சாமுண்டி மலை அடிவாரத்தில் வாகனம் மோதியதில் கழுதைப்புலி பரிதாபமாக செத்தது.
மைசூரு
மைசூரு டவுனில் இருந்து 13 கிலோ மீட்டர் தூரத்தில் சாமுண்டி மலை உள்ளது. இந்த மலை அடிவாரத்தில் நேற்று காலை கழுதைப்புலி ஒன்று செத்து கிடந்தது. இதனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்தனர். பின்னர் அவர்கள் மைசூரு வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் செத்து கிடந்த கழுதைபுப்லியை அப்பகுதியில் அடர்ந்த வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்தனர். இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமுண்டி மலை அடிவாரத்தில் மழை பெய்தது.
இதனால் மலைப்பகுதியில் செடிகள் பச்சை பசேல் என காட்சி அளிக்கிறது. இதனால் ஒரு சில வனவிலங்குகள் மலைப்பகுதியை விட்டு வெளியே வருகிறது. இதேப்போல் கழுதைப்புலியும் மலைப்பகுதியில் இருந்து வெளியே சென்றுள்ளது.
அப்போது சாலையை கடக்க முயன்றுள்ளது. இதில் அந்த வாகனம் மோதி கழுதைப்புலி செத்துள்ளது. செத்தது 3 வயது கழுதைப்புலியாகும், என்றார்.