வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை பயங்கரவாதிகளுக்கு பிரித்து கொடுத்த வியாபாரி கைது


வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை பயங்கரவாதிகளுக்கு பிரித்து கொடுத்த  வியாபாரி கைது
x

பயங்கரவாதிகள் கைதான விவகாரத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பணத்தை பிரித்து கொடுத்த வியாபாரியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பெங்களூரு:-

பயங்கரவாதிகள் கைது

பெங்களூருவில் நாசவேலையில் ஈடுபட முயன்றதாக கூறி 5 பயங்கரவாதிகளை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர்களது வீடுகளில் இருந்து கையெறி குண்டுகள், துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது குற்றவழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு அவர்கள் 5 பேரும் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டது தெரிந்தது. அப்போது சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், ஜுனைத் ஆகியோருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அவர்களுக்கு பயங்கரவாத பயிற்சி வழங்கப்பட்டு தெரிந்தது. இதையடுத்து வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ஜுனைத் மற்றும் கையெறி குண்டுகளை சப்ளை செய்த சல்மான் ஆகிய 2 பேரையும் பிடிக்க சர்வதேச போலீசார் உதவியை, குற்றப்பிரிவு போலீசார் நாடி உள்ளனர். இந்த நிலையில் பயங்கரவாதிகளுக்கு, வெளிநாடுகளில் இருந்து வந்த பணத்தை வினியோகம் செய்தவர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

மேலும் அதுதொடர்பாக பெங்களூருவில் கடை நடத்தி வரும் வியாபாரியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வெளிநாடுகளில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட பணத்தை, 20 சதவீத கமிஷன் பெற்று கொண்டு, பயங்கரவாதிகளுக்கு பிரித்து கொடுத்தது தெரிந்தது. வியாபாரியின்

வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 2 பேர்

சிறையில் உள்ள பயங்கரவாதி நசீர், கைதிகள் சிலரை மூளைச்சலவை செய்ததாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் கூறுகையில், கோரமங்களா பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்ததாக மோகன் என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டபோது, நசீருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் மோகனுக்கு, முகமது அப்துல்லா என பெயர் வைத்த நசீர், அவருக்கு மூளைச்சலவை செய்து பயங்கரவாதியாக மாற்றி உள்ளார்.இதேபோல் நசீர் மேலும் 2 கைதிகளை மூளைச்சலவை செய்துள்ளார். அவர்கள் 3 பேரும் ஜாமீனில் வெளியே வந்த பிறகு, நசீருக்கும், அவர்களுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என்று கூறியுள்ளனர்.

இதற்கிடையில் தட்சிண கன்னடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கு பணம் வினியோகம் செய்யப் பட்டதாக கூறி தேசிய புலனாய்வு முகமையை சேர்ந்த அதிகாரிகள் உல்லால், கின்னியா, வச்சில்பதவு, பானேமங்களூரு ஆகிய இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.


Next Story