பழமையான லிங்கேஸ்வரர் கோவிலில் 5 அடி உயர சிவலிங்கம் திருட்டு


பழமையான லிங்கேஸ்வரர் கோவிலில் 5 அடி உயர சிவலிங்கம் திருட்டு
x

முல்பாகல் அருகே குருடுமலையில் உள்ள பழமையான லிங்கேஸ்வரா் கோவிலில் 5 அடி உயர சிவலிங்கத்தை திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கோலார் தங்கவயல்:

லிங்கேஸ்வரர் கோவில்

கோலார் மாவட்டம் முல்பாகல் தாலுகா குருடுமலை கிராமத்தில் மலைப்பகுதியில் பழமையான லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவில் மன்னர் ராஜராஜசோழன் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. இந்த கோவிலில் லிங்கேஸ்வரரை மக்கள் மூலவராக வழிபட்டு வருகிறார்கள். இங்கு 5 அடி உயரத்தில் சிவலிங்கம் உள்ளது.

முல்பாகல் மட்டுமின்றி மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் குருடுமலை லிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில் பூசாரி, பூஜைகள் முடிந்ததும் ேகாவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார்.

சிவலிங்கம் திருட்டு

அந்த சமயத்தில் நள்ளிரவில் கோவிலின் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், மூலஸ்தானத்தில் இருந்த 5 அடி உயர சிவலிங்கத்தை திருடி சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று காலை பூசாரி, கோவிலுக்கு வந்தார். பின்னர் அவர் லிங்கேஸ்வரருக்கு பூஜை செய்ய, மூலஸ்தான கதவை திறந்துள்ளார். அப்போது அங்கு 5 அடி உயர சிவலிங்கம் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அவர் கோவில் நிர்வாகிகளிடம் தெரிவித்தாா். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் முல்பாகல் புறநகர் போலீசில் புகார் கொடுத்தாா். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். இதையடுத்து தடயஅறிவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, அங்கு பதிவாகி இருந்த ரேகைகளை பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மர்மநபர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து முல்பாகல் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். பிரசித்தி பெற்ற லிங்கேஸ்வரர் கோவிலில் மூலஸ்தானத்தில் புகுந்து 5 அடி உயர சிவலிங்கத்தை மா்மநபர்கள் திருடி சென்ற துணிகர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறகையில், லிங்கேஸ்வரர் கோவில் மூலஸ்தானத்தில் இருந்த 5 அடி உயர சிவலிங்கத்தை 15 பேர் கொண்ட கும்பல் திருடியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம். மன்னர் காலத்தில் பிரதிஷ்டை செய்த இந்த சிவலிங்கத்துக்கு அடியில் தங்கம் உள்ளிட்ட விலையுயர்ந்த வைத்திருக்கலாம் என கருதி மர்மநபர்கள் சிவலிங்கத்தை திருடி சென்றிருக்கலாம் என்று கருதுகிறோம். விரைவில் மர்மநபர்கள் பிடிபடுவார்கள் என்றனர்.

பழங்கால சிலைகள்

குடுருமலை கிராமத்தை சுற்றி உள்ள பல கோவில்களில் சாமி சிலைகள் அடிக்கடி திருட்டு போய் வருகிறது. ஏற்கனவே குருடுமலையில் நடராஜர் சிலை, லட்சுமி தேவி சிலைகளை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். மர்மநபர்கள் பழங்கால சிலைகளை குறிவைத்து திருடுவதாக அந்தப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.


Next Story