மைசூரு, மண்டியாவில் தொடர் கனமழை: மகாராணி கல்லூரியில் 100 ஆண்டு பழமையான கட்டிடம் இடிந்தது
மைசூரு, மண்டியாவில் தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இதனால் மகாராணி கல்லூரியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடம் இடிந்தது. மேலும் ஹேமாவதி ஆற்று தீவில் 900 ஆடுகளுடன் 10 பேர் சிக்கி கொண்டுள்ளனர்.
மைசூரு:
தொடர் கனமழை
கர்நாடகத்தில் கடந்த சில தினங்களாக பெங்களூரு உள்பட பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதேபோல், மைசூரு மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக இடைவிடாது தொடர்ந்து கனமழை கொட்டி வருகிறது. இந்த தொடர் கனமழையால் மாவட்டத்தில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும் மைசூரு நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் மக்கள் இரவு முழுவதும் தூங்காமல் கடும் அவதிக்குள்ளாகினார்கள். மேலும் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இதனால், விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளன.
கட்டிடம் இடிந்தது
தொடர் கனமழை காரணமாக மைசூரு நகரில் உள்ள மகாராணி மகளிர் கல்லூரியில் உள்ள கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. 100 ஆண்டுகள் பழமையான இந்த கட்டிடத்தில் மேல் பகுதியில் தண்ணீர் தேங்கி கிடந்ததால், அரிப்பு ஏற்பட்டு நேற்று ஒரு பகுதி இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அந்தப்பகுதியில் மாணவ-மாணவிகள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த கட்டிடம் மிகவும் பழமையானதாக இருந்ததால், அங்கு வகுப்புகள் எதுவும் நடக்கவில்லை.
மேலும் மைசூரு சாமுண்டி மலையிலும் தொடர் கனமழை காரணமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்தப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் மக்கள் நடமாட்டத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் சாலை விரிசலை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
மண்டியா
இதேபோல், மண்டியா மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அந்த மாவட்டத்தில் ஓடும் காவிரி, ஹேமாவதி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏரி, குளங்கள் நிரம்பி தண்ணீர் வெளியேறுவதால் விளைநிலங்களுக்குள் தண்ணீர் புகுந்து பயிர்கள் நாசமாகி உள்ளன.
மைசூரு-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையிலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. தொடர் கனமழையால் ஸ்ரீரங்கப்பட்டணா கோட்டைக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளது.
900 ஆடுகளுடன்...
கே.ஆர்.பேட்டை தாலுகா அக்கிகொப்பலு அருகே ஒசபட்டணாவில் ஓடும் ஹேமாவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒசபட்டணாவை சுற்றி உள்ள பகுதியில் தண்ணீர் செல்கிறது. இதன்காரணமாக அந்தப்பகுதியே தீவு போல மாறி உள்ளது. இந்த நிலையில் துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகா ஹூலியாறு கிராமத்தை சேர்ந்த 10 பேர் 900 ஆடுகளுடன் ஒசபட்டணாவுக்கு வந்திருந்தனர்.
தற்போது ஹேமாவதி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், ஒசபட்டணா தீவில் சிக்கி கொண்டனர். கடந்த 2 நாட்களாக அவர்கள் உணவின்றி ஆடுகளுடன் தீவில் சிக்கி தவித்து வருகிறார்கள். இதையடுத்து தாசில்தார் ரூபா மற்றும் தீயணைப்பு படையினர் ஒசபட்டணாவுக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் பேரிடர் மீட்பு குழுவினரும் அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ரப்பர் படகுகள் மூலம் தீவில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அவர்கள் 10 பேரையும் ரப்பர் படகில் ஏறி வரும்படியும், வெள்ளம் குறைந்த பின்னர் ஆடுகளை மீட்டு கொள்ளலாம் என்றும் தெரிவித்தனர்.
ஆனால் தீவில் சிக்கியுள்ள 10 பேரும், செத்தாலும் 900 ஆடுகளை விட்டு வரமாட்டோம் என்று பிடிவாதமாக கூறிவிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் ஒரு வாரத்திற்கு தேவையான உணவுகளை கொடுத்துவிட்டு திரும்பி வந்தனர்.