இறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த 1½ வயது குழந்தை திடீர் சாவு


இறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த 1½ வயது குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 19 Aug 2023 12:15 AM IST (Updated: 19 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தார்வார் அருகே இறந்துபோனதாக கருதி அடக்கம் செய்ய முயன்றபோது, இறுதிச்சடங்கின் போது உயிர் பிழைத்த 1½ வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

மண்ணில் பிறக்கும் அனைத்து உயிர்களும் என்றோ ஒரு நாள் இறக்கும் என்பது நியதி. ஆனால் அந்த உயிர் எப்போது போகும் என்பது யாருக்கும் தெரியாது. இந்த நிலையில் இறந்துபோனதாக டாக்டர்கள் கூறியதால் இறுதிச்சடங்கு நடத்தப்பட்டபோது உயிர் பிழைத்த குழந்தை ஆஸ்பத்திரியில் உயிரிழந்தது. அதன் விவரம் பின்வருமாறு:-

கர்நாடக மாநிலம் தார்வார் மாவட்டம் நவலகுந்து தாலுகா பசாப்புரா கிராமத்தை சேர்ந்த ஒரு தம்பதிக்கு ஆகாஷ் என்ற 1½ வயது ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தைக்கு கடந்த 13-ந்தேதி திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது.

உடனே பெற்றோர், குழந்தையை உப்பள்ளியில் உள்ள கிம்ஸ் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு குழந்தையின் உடல் மோசமானதை தொடர்ந்து டாக்டர்கள் செயற்கை சுவாச கருவி பொருத்தி சிகிச்சை அளித்து வந்தனர். மேலும் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என டாக்டர்கள் தெரிவித்தனர். இதையடுத்து குழந்தை ஆகாஷ் இறந்துவிட்டதாக கருதிய பெற்றோர், குழந்தையுடன் உடலை வீட்டுக்கு எடுத்துச் சென்றனர். குழந்தையின் உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்ய குடும்பத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி மாலையில் இறுதிச்சடங்கு நடந்துள்ளது. குழந்தையை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டி உள்ளனர். அந்த சமயத்தில் தண்ணீர் குழந்தை வாயில் வழிந்த போது அந்த குழந்தை கை, கால்களை அசைத்துள்ளது. இதையடுத்து குழந்தையை உறவினர்கள் பரிசோதித்து உள்ளனர். அந்த குழந்தைக்கு உயிர் இருப்பது தெரியவந்தது.

இதனால் இன்ப அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், குழந்தையை மீண்டும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று குழந்தை ஆகாஷ் உயிரிழந்தது. இதனால் குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

இறந்ததாக கருதி இறுதிச்சடங்கு செய்தபோது உயிர் பிழைத்த குழந்தை பின்னர் மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கிம்ஸ் மருத்துவமனை டீன் அருண் கூறுகையில், 'குழந்தை ஆகாஷ் மருத்துவமனையில் இருக்கும் போது உயிரிழக்கவில்லை. நாங்கள் குழந்தை உயிர் பிழைப்பது கடினம் என்று தான் கூறினோம். குழந்தையின் பெற்றோர் தான் ஆகாசை மருத்துவமனையில் இருந்து கொண்டு சென்றனர். நாங்கள் எவ்வளவு கூறியும் கேட்காமல் குழந்தை இறந்துபோனதாக கூறி கொண்டு சென்றனர்' என்றார்.


Next Story