9 ஆண்டுகள் நிறைவு: மோடி அரசின் சாதனைகளை விளக்கி மத்திய மந்திரிகள் பேட்டி


9 ஆண்டுகள் நிறைவு: மோடி அரசின் சாதனைகளை விளக்கி மத்திய மந்திரிகள் பேட்டி
x

கோப்புப்படம்

மோடி அரசின் 9 ஆண்டுகள் நிறைவையொட்டி, அரசின் சாதனைகளை விளக்கி நாடு முழுவதும் மத்திய மந்திரிகள் பேட்டி அளித்தனர்.

புதுடெல்லி,

கடந்த 2014-ம் ஆண்டு நரேந்திர மோடி முதல் முறையாக பிரதமர் ஆனார். 2019-ம் ஆண்டு 2-வது தடவையாக பிரதமர் ஆனார். அந்த ஆண்டு மே 30-ந் தேதி அவர் மீண்டும் பிரதமராக பதவி ஏற்றார். நேற்றுடன் அவரது அரசு தொடர்ச்சியாக 9 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.

இதையொட்டி, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் மத்திய மந்திரிகளும், பா.ஜனதா முதல்-மந்திரிகளும் பேட்டி அளித்தனர். 'பவர் பாயிண்ட்' மூலம் மோடி அரசின் சாதனைகளை விளக்கினர்.

உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், லக்னோவில் அளித்த பேட்டியில், 9 ஆண்டுகால மோடி ஆட்சியால் பாதுகாப்பான எல்லைகளும், உலகத்தரமான உள்கட்டமைப்பும் கிடைத்துள்ளதாகவும், உலக அளவில் மதிப்பு அதிகரித்து இருப்பதாகவும் கூறினார்.

அஸ்வினி வைஷ்ணவ்

ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ், அசாம் மாநில தலைநகர் கவுகாத்தியில் பேட்டி அளித்தார். வடகிழக்கு மாநிலங்களுக்கு ரெயில்வேக்கான ஒதுக்கீடு ரூ.10 ஆயிரத்து 200 கோடியாக அதிகரித்து இருப்பதாக கூறினார்.

சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர்ஆதித்ய சிந்தியா டெல்லியில் பேட்டி அளித்தபோது, ஏழைகளின் வாழ்வை உயர்த்தியதுடன், தற்சார்பு நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்று கூறினார்.

அனுராக் தாக்குர்

மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர், ஆமதாபாத்தில் பேட்டி அளித்தார். 2024-ம் ஆண்டு தேர்தலில் 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று பா.ஜனதா ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளும் என்று அவர் கூறினார். 27 சதவீத ஏழைகளை வறுமையில் இருந்து விடுவித்து இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மத்திய மந்திரி பிரகலாத் சிங் படேல், இமாசலபிரதேச மாநில தலைநகர் சிம்லாவில் பேட்டி அளித்தார். சர்வதேச அளவில் இந்தியாவின் கவுரவம் உயர்ந்து இருப்பதாக கூறினார்.

மத்திய சட்ட மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் ஐதராபாத்தில் பேட்டி அளித்தார். ஊழல் இல்லாத வெளிப்படையான அரசை மோடி அளித்து வருவதாக அவர் கூறினார்.

நிர்மலா சீதாராமன்

மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன் (மும்பை), கஜேந்திரசிங் ஷெகாவத் (பாட்னா), பியுஷ் கோயல் (ஜெய்ப்பூர்), ஸ்மிரிதி இரானி (ரோதக்), பூபேந்திர யாதவ் (போபால்), கிஷன் ரெட்டி (புவனேஸ்வர்) ஆகியோரும் பேட்டி அளித்தனர்.

மேலும், இன்று (செவ்வாய்க்கிழமை) முதல், ஒரு மாத காலம் மக்களை தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகளை பா.ஜனதா நடத்துகிறது. பிரதமர் மோடி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.


Next Story