ஜீப் மீது லாரி மோதியதில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி சாவு
துமகூரு அருகே ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
துமகூரு: துமகூரு அருகே ஜீப் மீது லாரி மோதிய கோர விபத்தில் தம்பதி உள்பட 9 பேர் உடல் நசுங்கி பலியானார்கள். அவர்களுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
கட்டணம் குறைவு
கர்நாடக தலைநகர் பெங்களூருவில் கட்டிடம் கட்டும் பணிகளில் ராய்ச்சூர், பாகல்கோட்டை உள்ளிட்ட வடகர்நாடக மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் வடகர்நாடக மாவட்டங்களில் இருந்து மூட்டை மூடிச்சுகளுடன் குரூசர் என்று அழைக்கப்படும் ஜீப்புகள் மூலம் தினமும் ஏராளமான மக்கள் பெங்களூருவுக்கு வருகின்றனர். இந்த ஜீப்புகளில் 12 பேர் அமர மட்டுமே இருக்கைகள் உள்ளது.
ஆனால் பஸ்சை விட குறைந்த கட்டணம் என்பதால் இந்த ஜீப்புகளில் 20-க்கும் மேற்பட்டோர் ஆபத்தான முறையில் பயணம் செய்து வருகின்றனர். இதனால் ஜீப்புகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதுபோல ஜீப் விபத்தில் சிக்கி 9 பேர் உயிரிழந்த கோர சம்பவம் இன்று நடந்து உள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஜீப் கவிழ்ந்தது
ராய்ச்சூர் மாவட்டம் மான்வி, சிந்தனூர், லிங்கசுகுர் தாலுகாக்களை சேர்ந்த தொழிலாளர்கள் பெங்களூருவில் கட்டிட வேலைக்காக நேற்று மதியம் ஒரு ஜீப்பில் ராய்ச்சூரில் இருந்து பெங்களூரு நோக்கி புறப்பட்டனர். அந்த ஜீப்பை ராய்ச்சூரை சேர்ந்த கிருஷ்ணப்பா(வயது 28) என்பவர் ஓட்டினார். ஜீப்பில் குழந்தைகள், பெண்கள் உள்பட 22 பேர் இருந்தனர்.
அந்த ஜீப் இன்று அதிகாலை 4.30 மணியளவில் துமகூரு மாவட்டம் சிரா தாலுகா கல்லம்பெல்லா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பாலேனஹள்ளி கேட் பகுதியில் வந்து கொண்டு இருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டு இருந்த தமிழக பதிவெண் கொண்ட ஒரு லாரியை, ஜீப் டிரைவர் முந்தி செல்ல முயன்றார். இந்த சந்தர்ப்பத்தில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தறிகெட்டு ஓடி சாலையில் கவிழ்ந்தது. ஜீப் கவிழ்ந்த வேகத்தில் டயர்கள் வெடித்தது. இதனால் ஜீப் சில அடி தூரம் இழுத்து செல்லப்பட்டு தடுப்பு சுவர் மீது மோதியது. இந்த சந்தர்ப்பத்தில் பின்னால் வேகமாக வந்த தமிழக பதிவெண் கொண்ட லாரி, ஜீப் மீது பயங்கரமாக மோதியது. இதில் ஜீப் முற்றிலும் உருக்குலைந்தது.
9 பேர் சாவு
இந்த கோர விபத்தைக்கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக சம்பவம் குறித்து கல்லம்பெல்லா போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த கல்லம்பெல்லா போலீசார் ஜீப்புக்குள் சிக்கி இருந்தவர்களை மீட்க முயன்றனர். அப்போது ஜீப்பின் இடிபாடுகளில் சிக்கி 2 குழந்தைகள், 3 பெண்கள், 4 ஆண்கள் உயிரிழந்தது தெரியவந்தது. மேலும் 14 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடினர். அவர்களை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக துமகூரு, சிராவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.
அதில் 2 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் மேல்சிகிச்சைக்காக பெங்களூரு நிமான்ஸ் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதற்கிடையே விபத்தில் பலியான 9 பேரின் உடல்களையும் போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக சிரா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தவர்கள் கிருஷ்ணப்பா(வயது 28), பிரபு(30), சுஜாதா(28), வினோத்(3), பசம்மா சிவப்பா(50), லட்சுமி(30), மீனாட்சி, சித்தய்யசாமி, நிங்கண்ணா என்பது தெரியவந்தது. இவர்களில் கிருஷ்ணப்பா ஜீப் டிரைவர் ஆவார். பிரபு-சுஜாதா கணவன்-மனைவி ஆவார்கள். இந்த தம்பதியின் மகன் தான் வினோத்.
வேகமாக ஓட்டியதால் விபத்து
படுகாயம் அடைந்தவர்களின் பெயர்கள் துர்கம்மா, பாலாஜி, சந்தீப், உமேஷ், எல்லம்மா, அனில், தேவராஜ், மோனிகா, நாகேஷ், நாகம்மா, வசந்த், வைஷாலி, விருபாக்சா, லதா ஆகும். மேற்கொண்டு போலீசார் நடத்திய விசாரணையில் ஜீப்பை டிரைவர் வேகமாகவும், கவனக் குறைவாகவும் ஓட்டியதும், லாரியை அதன் டிரைவர் வேகமாக ஓட்டி வந்ததும் விபத்துக்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது. அவர் குடிபோதையில் ஜீப்பை ஓட்டினாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும் 12 பேர் பயணிக்க கூடிய ஜீப்பில் 23 பேர் வந்ததும் விபத்துக்கு ஒரு காரணம் என்றும் சொல்லப்படுகிறது.
விபத்து நடந்ததும் லாரியை விட்டுவிட்டு டிரைவர் தப்பி சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் விபத்து பற்றி அறிந்ததும் ஐ.ஜி. சந்திரசேகர், துமகூரு மாவட்ட கலெக்டர் ஒய்.எஸ்.பட்டீல், துமகூரு போலீஸ் சூப்பிரண்டு ராகுல்குமார், சிரா தொகுதி பா.ஜனதா எம்.எல்.ஏ. ராஜேஸ் குமார் ஆகியோர் சம்பவம் நடந்த இடத்திற்கும், ஆஸ்பத்திரிக்கும் சென்று விசாரணை நடத்தினர். மேலும் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு ஆறுதல் கூறினர்.
சோகம்
இந்த விபத்து குறித்து கல்லம்பெல்லா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தம்பதி உள்பட 9 பேர் உயிரிழந்த சம்பவம் கர்நாடகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையே போலீசார் வாகன சோதனை நடத்தி வடகர்நாடகத்தில் இருந்து பெங்களூரு வந்த 5 ஜீப்புகளை பறிமுதல் செய்தனர். அப்போது வாக்குவாதத்தில் ஈடுபட்ட டிரைவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
மோடி இரங்கல்
விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்குவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், 'துமகூருவில் நடைபெற்ற விபத்து சம்பவம்
இதயத்தை நொறுக்குவதாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன். இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கப்படும்' என்றார். ஜனாதிபதி திரவுபதி முர்மு தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:- கர்நாடகத்தில் நடந்த சாலை விபத்தில் 9 பேர் உயிரிழந்து இருப்பது துரதிர்ஷ்டவசமானது. விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். விபத்தில் படுகாயம் அடைந்தவர்கள் விரைவாக குணம் அடைய நான் பிரார்த்திக்கிறேன்' என்று கூறியுள்ளார்.
பசவராஜ் பொம்மை
அதே போல் விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலா ரூ.5 லட்சம் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- துமகூருவில் நடைபெற்ற விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும். மேலும் காயம் அடைந்தவா்களின் சிகிச்சை செலவு முழுவதையும் அரசே ஏற்கும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி துமகூரு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு பசவராஜ் பொம்மை குறிப்பிட்டுள்ளார்.
சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் மொத்தம் தலா ரூ.7 லட்சம் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
6 பேரின் கண்கள் தானம்
விபத்தில் உயிரிழந்த டிரைவர் கிருஷ்ணப்பா, சித்தய்யசாமி, நிங்கண்ணா, மீனாட்சி, சுஜாதா, பிரபு ஆகிய 6 பேரின் கண்களையும் தானம் செய்ய அவர்களது குடும்பத்தினர் முன்வந்தனர். இந்த தகவலை சிரா தாசில்தார் உறுதிப்படுத்தினார். இன்று பிரேத பரிசோதனை செய்யப்பட்ட போது 6 பேரின் கண்களும் அறுவை சிகிச்சை மூலம் தானமாக பெறப்பட்டன.
விபத்தில் கிருஷ்ணப்பா இறந்தது பற்றி அறிந்ததும் அவரது மனைவி சிரா ஆஸ்பத்திரி முன்பு அமர்ந்து கண்ணீர்விட்டு கதறி அழுதார். இது காண்போரை கண்கலங்க வைத்தது.
தந்தை-தாய் வீட்டில் இருப்பதாக கூறிய சிறுவன்
விபத்தில் பிரபு-சுஜாதா தம்பதி மற்றும் அவர்களின் மகன் வினோத்(3) ஆகியோர் உயிரிழந்தனர். இந்த நிலையில் பிரபு-சுஜாதா தம்பதியின் இன்னொரு மகனான 4 வயது சிறுவனை உறவினர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர்.
அப்போது தந்தை, தாய் இறந்தது பற்றி அறியாத அந்த சிறுவன் தனது அப்பா, அம்மா வீட்டில் இருப்பதாகவும், அவர்களை பாா்க்க வேண்டும் என்றும் மழலை குரலில் கூறினான். இது அங்கிருந்தவர்கள் கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
போக்குவரத்து அதிகாரிகளுடன் ஆலோசனை
விபத்து குறித்து ஐ.ஜி. சந்திரசேகர் நிருபர்களிடம் கூறும்போது, 'விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஜீப்பை டிரைவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்துக்கு காரணம் என்று தெரியவந்து உள்ளது.
அதிக ஆட்களை ஏற்றி வந்த 5 ஜீப்புகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. ஜீப்புகளில் அதிக ஆட்களை ஏற்றி வருவதற்கு தடை விதிப்பது குறித்து போக்குவரத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படும்' என்றார்.