மாலத்தீவு அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து 9 இந்தியர்கள் உடல் கருகி பலி
மாலத்தீவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இந்தியர்கள் 9 பேரும், வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் உடல் கருகி பலியாகினர்.
மாலே,
மாலத்தீவு நாட்டின் தலைநகர் மாலேயில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டு தொழிலாளர்கள் பலர் தங்கியிருந்தனர். இவர்கள் கட்டிடத்தின் மேல்தளத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தனர். தரைத்தளத்தில் வாகனங்கள் பழுது பார்க்கும் கடை இயங்கி வந்தது.
இந்த நிலையில் இந்தியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு தங்களது குடியிருப்பில் உறங்கி கொண்டிருந்தனர். நேற்று அதிகாலையில் தரைத்தளத்தில் உள்ள வாகனங்கள் பழுதுபார்க்கும் கடையில் திடீரென தீப்பிடித்தது. மளமளவென பற்றி எரிந்த தீ அதிவேகத்தில் மேலத்தளத்துக்கும் பரவியது.
கட்டிடம் முழுவதிலும் கொழுந்துவிட்டு எரிந்ததில் அங்கு கரும்புகை மண்டலம் எழுந்தது. தீ விபத்து நேரிட்டபோது கட்டிடத்தின் மேல்தளத்தில் இருந்த வெளிநாட்டு தொழிலாளர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததாலும், நெரிசலான இடத்தில் உள்ள கட்டிடம் என்பதாலும் அவர்களால் உடனடியாக வெளியேற முடியவில்லை.
இதனிடையே இந்த தீ விபத்து குறித்து தகவல் கிடைத்ததும் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர். சுமார் 4 மணி போராட்டத்துக்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
எனினும் அதற்குள் தீயின் கோரப்பிடியில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் 10க்கும் மேற்பட்டோர் பலத்த தீக்காயம் அடைந்தனர். அவர்களை தீயணைப்பு வீரர்கள் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் 9 இந்தியர்கள் என்றும், மற்றொருவர் வங்காளதேசத்தை சேர்ந்த ஒருவர் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. இதனால் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறும் நபர்களில் இந்தியர்கள் பலர் இருக்கலாம் என நம்பப்படுகிறது.
இந்த நிலையில் இந்த தீவிபத்து குறித்து மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், "மாலே நகரில் நடந்த ஆபத்தான தீ விபத்து மிகவும் வருத்தமளிக்கும் சம்பவம். பலர் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.
விபத்து தொடர்பாக மாலத்தீவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், "மாலேயில் ஏற்பட்ட மோசமான தீ விபத்தில் இந்தியர்கள் உள்ளிட்டோர் உயிரிழந்ததற்கு நாங்கள் வருந்துகிறோம். விபத்து குறித்து மாலத்தீவு அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர் சந்தை பகுதியான மாலே நகரம் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நகரங்களில் ஒன்றாக அறியப்படுகிறது. அந்த நகரின் மக்கள் தொகையில் கிட்டத்தட்ட பாதி பேர் வேலை தேடி வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்றும், அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் மாலத்தீவின் அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
கொரோனா தொற்று பரவலின் போது மாலேயில் வெளிநாட்டு தொழிலாளர்களின் மோசமான வாழ்க்கை நிலைமைகள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டன. அப்போது உள்ளூர் மக்களுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டு தொழிலாளர்களிடையே தொற்று 3 மடங்கு வேகமாக பரவியது குறிப்பிடத்தக்கது.