சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 9 நாட்களே உள்ளது
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு, மே.1-
தலைவர்கள் சூறாவளி பிரசாரம்
இந்த தேர்தலில் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதாதளம் (எஸ்) 211 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க பா.ஜனதா, காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டி வருகிறது.
ஜனதாதளம் (எஸ்) கட்சியும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளது. இதையடுத்து, சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக கர்நாடகத்தில் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் முகாமிட்டு தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். முக்கிய தலைவர்கள் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்பது, திறந்த வாகனத்தில் ஊர்வலம், வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிப்பது என்று சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால் தேர்தல் களம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
பிரதமர் மோடி
கர்நாடகத்தில் நேற்று பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் மாநிலம் முழுவதும் சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டனர். சட்டசபை தேர்தல் பிரசாரத்திற்காக நேற்று முன்தினம் கர்நாடகம் வந்திருந்த பிரதமர் மோடி நேற்று 2-வது நாளாக சூறாவளி பிரசாரம் செய்தார். முதலில் கோலார் மாவட்டத்திலும், 2-வதாக ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவிலும், 3-வதாக ஹாசன் மாவட்டம் பேளூருவிலும், நேற்று மாலையில் மைசூரு மாவட்டத்தில் திறந்த வாகனத்தில் 5 கிலோ மீட்டருக்கு பிரதமர் மோடி ஊர்வலம் சென்றிருந்தார். அவர் ஒரே நாளில் 3 பிரசார கூட்டங்களிலும், ஒரு திறந்த வாகன பேரணியிலும் பங்கேற்றார்.
இதுபோல், பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தாவணகெரே மாவட்டம் ஒன்னாளி, தட்சிண கன்னடா மாவட்டம் குந்தாபுரா, சுள்ளியாவிலும், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சவனூரு தொகுதியிலும், முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி, ஒசநகர், சாவலகி, பீலகி, தார்வார் மாவட்டம் உப்பின பெடகேரி ஆகிய 5 இடங்களில் பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார்.
தமிழக தலைவர்கள்
உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நேற்று கொப்பல் மாவட்டம் கங்காவதி, ராய்ச்சூர் மாவட்டம் டவுன், கலபுரகி மாவட்டம் சித்தாபுரா, வாடி, ஆலந்தாவில் நடந்த பொதுக்கூட்டங்கள் மற்றும் திறந்த வாகனத்தில் ஊர்வலம் சென்று வாக்கு சேகரித்திருந்தார். பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பெங்களூரு பேடராயனபுரா, ஹெப்பால் தொகுதிகளில் நேற்று தீவிர பிரசாரம் செய்தார்.
மேலும் தமிழ்நாட்டை சேர்ந்த மத்திய மந்திரியான எல்.முருகன் சிக்கமகளூரு மாவட்டத்தில் முகாமிட்டு சங்கரபுரா மற்றும் குகுந்தா பகுதிகளில் பிரசாரம் செய்திருந்தார். இதுபோல், மத்திய மந்திரிகள் ஷோபா, பிரகலாத் ஜோஷி, நடிகைகள் ஸ்ருதி, தாரா ஆகியோரும் பா.ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டி இருந்தார்கள்.
பிரியங்கா காந்தி பிரசாரம்
காங்கிரஸ் கட்சியை பொறுத்தவரை அக்கட்சியின் தேசிய தலைவரான மல்லிகார்ஜுன கார்கேவின் சொந்த ஊர் கர்நாடகம் என்பதால், கடந்த சில நாட்களாகவே இங்கு தங்கி இருந்து தங்களது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, நேற்று சிவமொக்கா மற்றும் சொரபாவில் நடந்த பொதுக்கூட்டங்களில் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்று பேசி இருந்தார்.
இதுபோல், காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தியும் கடந்த 3 நாட்களாக கர்நாடகத்தில் முகாமிட்டு சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக ஏழைகளின் வீடுகளுக்கு செல்வது, ஓட்டலுக்கு சென்று தோசை சுடுவது என வாக்காளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அதுபோல், நேற்று பெலகாவி மாவட்டம் கானாப்புராவிலும், பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டியில் நடந்த பொதுக்கூட்டங்களிலும், பெலகாவி மாவட்டம் குடசியில் நடந்த ரோடு ஷோவிலும் பங்கேற்று காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பிரியங்கா காந்தி ஆதரவு திரட்டினார்.
மோடிக்கு போட்டியாக தேவேகவுடா
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் உள்ள தொகுதிகளிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தாவணகெேர மாவட்டம் ஜகலூருவிலும் தீவிர பிரசாரம் செய்து காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு திரட்டியதுடன், பா.ஜனதா தலைவர்கள் கூறிய குற்றச்சாட்டுகளுக்கும் தக்க பதிலடி கொடுத்து பேசி இருந்தார்கள். ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவேகவுடா 91 வயதிலும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்றும் அவர் தீவிர பிரசாரம் செய்தார்.
அதாவது பிரதமர் மோடி ராமநகர் மாவட்டம் சென்னப்பட்டணாவில் உள்ள ஷெட்டிஹள்ளியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று இருந்தார். முன்னாள் பிரதமர் தேவேகவுடா அதே சென்னப்பட்டணாவில் உள்ள இக்கலூருவில் தனது மகன் குமாரசாமிக்கு
ஆதரவாக வாக்கு சேகரித்தார். பிரதமர் வருவார், போவார், யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை கர்நாடக மக்கள் தான் தீர்மானிப்பார்கள் என்று தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
மகனுக்கு ஆதரவு திரட்டினார்
முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நேற்று மண்டியா மாவட்டத்தில் உள்ள ஆதிசுஞ்சனகிரி மடத்திற்கு, மண்டியா தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர்களை அழைத்து சென்றிருந்தார். மடாதிபதி நிர்மலானந்த சுவாமியிடம் ஆசி பெற்றதுடன், மடத்தில் உள்ள கால பைரவா சாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்தும் வழிபட்டார். கடந்த தேர்தலில் மண்டியாவில் 8 தொகுதியிலும் ஜனதாதளம் (எஸ்) கட்சி வெற்றிருந்தது என்பதால், தற்போதும் வெற்றி பெற மடத்திற்கு சென்று குமாரசாமி வழிபட்டதாக கூறப்படுகிறது.
அதன்படி, ராமநகர் தொகுதியில் தனது மகன் நிகிலுக்கு ஆதரவாக குமாரசாமி தீவிர பிரசாரம் செய்தார். இதுபோல், ஆம்ஆத்மி, சுயேச்சை வேட்பாளர்களும் வீடு, வீடாக சென்று பிரசாரம் செய்தார்கள். சட்டசபை தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ பிரசாரம் வருகிற 8-ந்தேதி காலையுடன் நிறைவு பெறுவதால், அனைத்து கட்சி தலைவர்களும் கர்நாடகத்தில் தொடர் முகாமிட்டு சூறாவளி பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளதால், கர்நாடக தேர்தல்களத்தில் அனல் பறந்து வருகிறது.