பீகாரில் கார் விபத்தில் 8 பேர் உயிரிழப்பு; ரூ.4 லட்சம் இழப்பீடு: முதல்-மந்திரி அறிவிப்பு
பீகாரில் கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.
பூர்னியா,
பீகாரின் பூர்னியா மாவட்டத்தில் கஞ்சியா கிராமத்தில் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. தரபாடியில் இருந்து புறப்பட்டு கிஷான்கஞ்ச் நோக்கி சென்ற அந்த கார் நேற்றிரவு திடீரென சாலையில் இருந்து விலகி அருகேயிருந்த குளத்திற்குள் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் நீரில் மூழ்கி 8 பேர் உயிரிழந்து உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு சென்ற போலீசார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இதுவரை 8 உடல்கள் மீட்கப்பட்டு உள்ளன.
2 பேர் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குளத்தில் கார் விழுந்து விபத்திற்குள்ளான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என பீகார் முதல்-மந்திரி நிதீஷ் குமார் அறிவித்து உள்ளார்.