கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மந்திரி அசோக், லட்சுமண் சவதி உள்பட 770 பேர் வேட்பு மனு தாக்கல்


கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி மந்திரி அசோக், லட்சுமண் சவதி உள்பட 770 பேர் வேட்பு மனு தாக்கல்
x

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மந்திரி ஆர்.அசோக், லட்சுமண் சவதி உள்பட 770 பேர் வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர்.

பெங்களூரு:

வேட்புமனு தாக்கல்

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் ஆர்வமாக மனு தாக்கல் செய்து வருகிறார்கள். முதல் நாளில் 221 பேர் மனு தாக்கல் செய்தனர். 2-வது நாளில் 200 பேரும், 3-வது நாளில் 842 பேரும் மனு தாக்கல் செய்தனர். ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம் (எஸ்) கட்சிகளின் வேட்பாளர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். ஆளும் பா.ஜனதா இன்னும் 2 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது.

காங்கிரஸ் கட்சி இன்னும் 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சியும் இன்னும் பல்வேறு தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவிக்காமல் உள்ளது. அதே நேரத்தில் அக்கட்சி, பிற கட்சிகளில் இருந்து வருகிற முக்கிய நிர்வாகிகளுக்கு நேரடியாக 'பி பாரம்' வழங்கி வருகிறது. இந்த நிலையில் நேற்ற 4-வது நாளாக வேட்புமனு தாக்கல் நடைபெற்றது.

லட்சுமண் சவதி

முக்கியமாக கனகபுரா தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர் ஆர்.அசோக் மனு தாக்கல் செய்தார். முன்னதாக அவா் கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்தார். இதில் மேலிட பொறுப்பாளர் அருண்சிங், உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி கிருஷ்ணப்பா பெங்களூரு விஜய நகர் தொகுதியிலும் மனு தாக்கல் செய்தனர்.

பீலகி தொகுதியில் தொழில்துறை மந்திரி முருகேஷ் நிரானி நேற்று மனு தாக்கல் செய்தார். அவருடன் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உடன் இருந்தார். அதே போல் முதோல் தொகுதியில் நீர்ப்பாசனத்துறை மந்திரி கோவிந்த் கார்ஜோள் மனு தாக்கல் செய்தார். பா.ஜனதாவில் இருந்து சமீபத்தில் விலகிய லட்சுமண் சவதி அதானியிலும், ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் ஒய்.எஸ்.வி.தத்தா கடூர் தொகுதியிலும், முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கோகாக் தொகுதியிலும், பா.ஜனதா வேட்பாளர் சுரேஷ்குமார் ராஜாஜிநகர் தொகுதியிலும், காங்கிரஸ் வேட்பாளர் ஜமீர்அகமதுகான் சாம்ராஜ்பேட்டையிலும், முன்னாள் மந்திரி அரவிந்த் லிம்பாவளி மனைவி மஞ்சுளா மகாதேவபுரா தொகுதியிலும் மனுக்களை தாக்கல் செய்தனர்.

770 பேர் வேட்புமனு தாக்கல்

நேற்று ஒரே நாளில் 770 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். பா.ஜனதா சார்பில் 130 பேரும், காங்கிரஸ் சார்பில் 116 பேரும், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் 75 பேரும், ஆம் ஆத்மி சார்பில் 61 பேரும், 206 பேர் சுயேச்சையாகவும் மனு தாக்கல் செய்துள்ளனர். 4 நாட்களில் மொத்தம் 1,610 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மனு தாக்கல் செய்ய நாளை (வியாழக்கிழமை) கடைசி நாள் ஆகும். மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ளன.


Next Story