குளிருக்காக நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி


குளிருக்காக நெருப்பு மூட்டியபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 10 Jan 2024 4:13 AM IST (Updated: 10 Jan 2024 5:53 AM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தை சேர்ந்தவர் ரஹீசுதின். இவர், தனது மனைவி மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் இரவு குளிர் அதிகமாக இருந்ததால் குளிரைத் தணிப்பதற்காக அறையில் நிலக்கரியால் நெருப்பு மூட்டி தூங்கியுள்ளனர்.

அப்போது நிலக்கரி நெருப்பால் ஏற்பட்ட புகை அறை முழுவதும் பரவியதால் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினர். நேற்று முன் தினம் இரவு தூங்கச் சென்றவர்கள் செவ்வாய்க்கிழமை மாலை வரை கதவைத் திறக்காததால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

இதையடுத்து அவர்கள் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் மயங்கிய நிலையில் 7 பேர் கிடந்துள்ளதை பார்த்து அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக அவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் ரஹீசுதினின் மூன்று குழந்தைகள் மற்றும் அவரது உறவினரின் இரு குழந்தைகள் என மொத்தம் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நிலக்கரியால் நெருப்பு மூட்டியதில் ஏற்பட்ட புகையால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு 5 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறிய போலீசார், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story