தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு 7 பேர் சாவு


தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழைக்கு 7 பேர் சாவு
x

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கலெக்டர் முல்லை முகிலன் தெரிவித்துள்ளார்.

மங்களூரு:

தட்சிண கன்னடா மாவட்டத்தில் கனமழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர் என கலெக்டர் முல்லை முகிலன் தெரிவித்துள்ளார்.

ெதன்மேற்கு பருவமழை

தட்சிண கன்னடா மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், தட்சிண கன்னடா மாவட்டத்தில் கடந்த 7 நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்தது. இந்த கனமழையால் 7 பேர் உயிரிழந்்துள்ளனர். எனவே மழையால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்படும் கிராமங்களில் பேரிடர் கட்டுப்பாடு குழு உருவாக்கப்படும். மேலும் மழை பாதிப்புகளை எதிர்கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

தாழ்வான பகுதிகளில் இருப்பவர்களுக்கு ஏற்கனவே எச்சரிக்கை நோட்டீஸ் கொடுத்து இடமாற்றம் செய்துள்ளோம். சுற்றுலா தலங்களில் புகைப்படங்கள் மற்றும் செல்பி எடுப்பதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும் கடற்கரை பகுதியில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். போலீசார் உத்தரவை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

வனப்பகுதியில் மலையேற்ற பயிற்சிக்கு செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அதனை மீறி வனப்பகுதிக்கு செல்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பல்வேறு பகுதிகளில் உள்ள பாலங்களில் விரிசல் ஏற்பட்டு அபாய நிலையில் உள்ளது. அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

'ரெட் அலர்ட்' எச்சரிக்கை

மழைக்காலங்களில் 'ரெட் அலர்ட்' எச்சரிக்கையின் போது கூடுதல் கவனம் செலுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது மாவட்டத்தில் 63 இடங்களில் வெள்ள அபாயம் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அந்தப்பகுதிகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சார்மடி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள மண்சரிவை சீர் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் குக்கே சுப்பிரமணியா சுவாமி கோவிலுக்கு செல்ல 4 வழித்தடங்கள் உள்ளன. அதில் 2 வழித்தடங்கள் தற்போது மூடப்பட்டுள்ளன.

சுற்றுலா பயணிகள்

கோவிலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அருவி மற்றும் தண்ணீருக்குள் இறங்கி குளிக்க கூடாது. இவ்வாறு மாவட்ட கலெக்டர் முல்லை முகிலன் கூறினார்.பேட்டியின் போது தட்சிண கன்னடா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்வந்த் மற்றும் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் குல்தீப் குமார் ஜெயின் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story