புதிதாக பரவும் ''ஜேஎன்.1' வகை கொரோனா: தமிழகத்தில் 4 பேருக்கு பாதிப்பு என தகவல்
கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
கொரோனாவின் புதிய வகையான 'ஜேஎன்.1' வகை தொற்று, பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்த வகை கொரோனா வேகமாகப் பரவுவதோடு, நோய்த் தடுப்பாற்றலையும் ஊடுருவுமென கூறப்படுகிறது. பல்வேறு உலக நாடுகளில் குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தொற்றுடன் பிற நோய்த் தொற்றுகளின் அதிகரிப்புக்கும் இந்தத் திரிபு காரணமாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விடுமுறை காலத்தையொட்டி மக்கள் அதிகம் பயணம் செய்வதும், கொண்டாட்டங்களுக்காக அதிக எண்ணிக்கையில் கூடுவதும் சுவாசத் தொற்று நோய் பரவலை எளிதாக்குகிறது. உலக அளவில் தினசரி கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், கொரோனா முன்னெச்சரிக்கை நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு பல்வேறு நாடுகளில் மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இந்தியாவில் நேற்று ஒரேநாளில் 63 பேருக்கு 'ஜேஎன்.1' கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா-34, மராட்டியம் 9, கர்நாடகா 8, கேரளா 6, தெலுங்கானா 2, தமிழகம் 4 பேருக்கும் 'ஜேஎன்.1' கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதனிடையே தமிழகத்தில் 'ஜேஎன்.1' வகை கொரோனா பாதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்கவில்லை. அதிகாரப்பூர்வ முடிவு கிடைக்க சில நாட்கள் காத்திருக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் கூறியுள்ளார்.
இந்தியாவில் கேரளாவை சேர்ந்த 79 வயது மூதாட்டிக்கு 'ஜேஎன்.1' வகை கொரோனா தொற்று முதன் முதலில் உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.