பிரவீன் நெட்டார் கொலையில் தொடர்புடைய 6 பேர் சரணடைய என்.ஐ.ஏ. உத்தரவு
பா.ஜனதா பிரமுகர் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ளவர்கள் வருகிற 30-ந் தேதிக்குள் சரணடைய என்.ஐ.ஏ. அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இல்லையென்றால் வீடுகள் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மங்களூரு:-
பா.ஜனதா பிரமுகர் கொலை
தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா பெல்லாரேவை அடுத்த நெட்டார் கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் நெட்டார் (வயது 35). பா.ஜனதா பிரமுகரான இவர் சொந்தமாக கோழிக்கடை நடத்தி வந்தார். இந்தநிலையில் கடந்த 2022-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி இரவு கோழிக்கடையில் இருந்து வெளியே வந்த இவரை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் அரிவாளால் வெட்டி கொலை செய்துவிட்டு சென்றனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்த போலீசார், முதற்கட்டமாக 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இந்த விசாரணையில் நம்பிக்கையில்லை. தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தவேண்டும் என்று பா.ஜனதா தரப்பினர் கோரிக்கை வைக்கப்பட்டது.
பி.எப்.ஐ.க்கு தொடர்பு
இந்த கோரிக்கை ஏற்ற அப்போதைய கர்நாடக அரசு (பா.ஜனதா அரசு) பிரவீன் நெட்டார் கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பினரிடம் ஒப்படைத்தனர். தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிர விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் பிரவீன் நெட்டார் கொலை வழக்கில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா (பி.எப்.ஐ.) அமைப்பை சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. மேலும் பண உதவி செய்ததும் உறுதியானது.
இதையடுத்து முதற்கட்டமாக தேசிய புலனாய்வு அதிகாரிகள், தட்சிண கன்னடா, மைசூரு, மங்களூரு ஆகிய மாவட்டங்களில், 33 இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது எலெக்ட்ரானிக் பொருட்கள், சில ஆவணங்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
6 பேர் வீடுகளில் சோதனை
இந்தநிலையில் 2-வது முறையாக நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அதிகாரிகள், தட்சிண கன்னடாவை சேர்ந்த பி.எப்.ஐ. பிரமுகர்கள் 5 பேரின் வீடு, அலுவலகம், மற்றும் குடகு மாவட்டம் சோமவார்பேட்டையை சேர்ந்த ஒருவரின் வீட்டிலும் சோதனை நடத்தினர்.
அங்கு எலெக்டரானிக் பொருட்கள் மற்றும் ஆவணங்களை தேசிய புலனாய்வு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் 6 பேரின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், தேடப்படும் நபர்கள் என்று அவர்களின் வீட்டு கதவில் நோட்டீசு ஒட்டினர்.
சரணடைய உத்தரவு
இந்தநிலையில் நேற்று முன்தினம் தேசிய புலனாய்வு அமைப்பினர், தட்சிண கன்னடா, குடகு மாவட்டத்தில் ஒலிப்பெருக்கி மூலம் தலைமறைவான 6 பேருக்கும் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதாவது வருகிற 30-ந் தேதிக்குள் 6 பேரும் தேசிய புலனாய்வு அதிகாரிகள் முன்பு சரணடையவேண்டும். இல்லையென்றால் 6 பேரின் வீடுகளும் ஜப்தி செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனர். இதனால் பிரவீன் நெட்டார் கொலை வழக்கு விசாரணை மீண்டும் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.