எந்தெந்த தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஏலத்தில் 5ஜி அலைக்கற்றையை பெற்றுள்ளன..? முழு விவரம்
5ஜி அலைக்கற்றை ஏலத்தில், 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம்விட்டது.
புதுடெல்லி,
தொலைதொடர்பு இணைப்புக்கு ஸ்பெக்ட்ரம் மிகவும் முக்கியமானது. ஸ்பெக்ட்ரம் சிறப்பாக கிடைப்பதால், சேவைகளின் தரம் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், செப்டம்பர் - அக்டோபர் மாதத்திற்குள் 5ஜி சேவைகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்றுடன் முடிவடைந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில், 72,098 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை அரசு ஏலம்விட்டது. இதில் 51.236 மெகாஹெர்ட்ஸ் (மொத்தத்தில் இது 71%) ரூ.1,50,173 கோடிக்கு ஏலத்தில் விற்பனையானது.
ஏலத்தில் முதன்முறையாக பங்கேற்ற அதானி டேட்டா நெட்ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம், 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் 400 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
பார்த்தி ஏர்டெல் லிமிடெட் நிறுவனம், 900, 1800, 2100, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 19,867.8 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
ரிலையன்ஸ் ஜியோ இன்போகாம் லிமிடெட், 700, 800, 1800, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 24,740 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
வோடபோன் ஐடியா லிமிடெட், 1800, 2100, 2500, 3300 மெகாஹெர்ட்ஸ் மற்றும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசைகளில் 6,228 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையை பெற்றது.
மொத்த ஏலத்தொகையான ரூ.1,50,173 கோடியில் அதிகபட்சமாக ரிலையன்ஸ் ஜியோ இன்போகாமின் ஏலத்தொகை ரூ.88,078 கோடியாகும்.
அதானி டேட்டா நெட்ஒர்க்சின் ஏலத்தொகை ரூ.212 கோடி, பார்த்தி ஏர்டெல் நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.43,048 கோடி, வோடப்போன் ஐடியா நிறுவனத்தின் ஏலத்தொகை ரூ.18,799 கோடி ஆகும்.
மேலும், அனைத்து பங்கேற்பாளர்களால் வழங்கப்படவுள்ள வருடாந்திர தவணைத்தொகை ரூ.13,365 கோடி எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
600 மெகா ஹெர்ட்ஸ் அலைவரிசை முதன்முறையாக ஏலத்தில் விடப்பட்டது. இதனை வாங்க எந்த நிறுவனமும் போட்டிப்போடவில்லை.
அதேவேளையில், நான்கு பங்கேற்பாளர்களும் 26 கிகாஹெர்ட்ஸ் அலைவரிசையில் ஸ்பெக்ட்ரம் பெற்றுள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் சீர்திருத்தங்கள் மற்றும் தெளிவான கொள்கை வழிகாட்டுதல் வெற்றிகரமான ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கு வழிவகுத்தது. தொலைத்தொடர்பு துறை வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் இது காட்டுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.