அரசு பள்ளிகளில் 5,581 கழிவறைகள் கட்டப்படும்
கர்நாடகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 5,581 கழிவறைகள் கட்டப்படும் என்று பட்ஜெட்டில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:-
பெங்களூரு விதான சவுதாவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கர்நாடக பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சம்பள உயர்வு
2022-2023-ம் ஆண்டு ஆஷா ஊழியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள், சமையலர்கள், கவுரவ பேராசிரியர்கள், ஒப்பந்த ஆசிரியர்கள், கிராம சகாயகாஸ், கிராம பஞ்சாயத்து நூலக கண்காணிப்பாளர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் உள்ளிட்டோருக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. இதன்மூலம் 4.45 லட்சம் பேர் பயனடைகிறார்கள்.
இதற்காக நடப்பு ஆண்டில் ரூ.775 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. இதுதவிர அங்கன்வாடி ஊழியர்கள், சமையல்காரர்கள், உதவியாளர்கள், மதிய உணவு திட்ட ஊழியர்கள் மற்றும் ஆஷா ஊழியர்கள், நூலக ஊழியர்கள், கல்வி, சுகாதார துறை, ஊட்டச்சத்து துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.1,000 சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.
ரைத்த வித்யா நிதி
'ரைத்த வித்யா நிதி' திட்டத்தின் கீழ் நடப்பு ஆண்டில் தையல்காரர்களின் பிள்ளைகளுக்கும் கல்வி நிதி உதவி வழங்கப்படும். மேலும் எஸ்.எஸ்.எல்.சி.யில். தேர்ச்சி பெற்று பி.யூ.சி. மற்றும் டிகிரி படிக்க விரும்பும் மாணவ-மாணவிகள் 'சி.எம். வித்யா சக்தி' திட்டம் அரசு பி.யூ. கல்லூரி, டிகிரி கல்லூரிகளில் சேர்ந்து இலவசமாக படிக்கலாம். இந்த திட்டத்தில் இவ்வாண்டு 8 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெற இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது.
'மக்களா பஸ்' திட்டம் மூலம் அரசு பஸ்கள் கூடுதலாக 1,000 முறை இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பஸ்கள் இல்லாமல் திண்டாடும் நிலை குறையும். இந்த ஆண்டில் விவேகா திட்டம் மூலம் ரூ.1,194 கோடி செலவில் மாநிலம் முழுவதும் அரசு பள்ளிகளில் 7 ஆயிரத்து 601 வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்பட உள்ளன. இதுதவிர ரூ.382 கோடியில் பல்வேறு கட்டிடங்கள் கட்டி கொடுக்கப்பட இருக்கின்றன.
5,581 கழிவறைகள் கட்டப்படும்
குழந்தைகளின் கல்விக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க 'பி.எம். ஸ்ரீ' திட்டத்தின் கீழ் ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டு இருக்கிறது. அரசு பள்ளிகளில் இவ்வாண்டில் ரூ.80 கோடி செலவில் 5 ஆயிரத்து 581 கழிவறைகள் கட்டி கொடுக்கப்படும். இவை தவிர இவ்வாண்டு 93 தாலுகாக்களில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் பி.யூ. கல்லூரிகள் ரூ.632 கோடி செலவில் மேம்படுத்தப்பட இருக்கிறது. நடப்பு ஆண்டில் 1,230 பள்ளி கட்டிடங்கள் புதிதாக கட்டிக்கொடுக்கப்பட உள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட 2,777 வகுப்பறைகள் சீரமைக்கப்பட இருக்கின்றன. அதிக எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் உள்ள பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்டி கொடுக்கப்படும். 60 தாலுகாக்களில் உள்ள பி.யூ. கல்லூரிகள் தேர்வு செய்யப்பட்டு அங்கு அறிவியல் கல்வி தொடங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.