கார் மீது லாரி மோதி கோர விபத்து; ஒரே குடும்பத்தில் பெண்கள் உள்பட 5 பேர் பலி
கொப்பலில் கார் மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தில் பெண்கள் உள்பட 5 போ் பலியானாா்கள். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
பெங்களூரு:
5 பேர் சாவு
கொப்பல் மாவட்டம் குகனூரு தாலுகா பானாபுரா கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அதே சாலையில் வந்த ஒரு லாரி திடீரென்று கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. லாரி மோதிய வேகத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது. இந்த கோர விபத்தில் காரில் இருந்த பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
மேலும் 4 பேர் பலத்தகாயம் அடைந்து உயிருக்கு போராடினாா்கள். தகவல் அறிந்ததும் குகனூர் போலீசார் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். மேலும் படுகாயம் அடைந்த 4 பேரையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்
போலீஸ் விசாரணையில், விபத்தில் பலியானவர்கள் கொப்பல் மாவட்டம் பின்னாலே கிராமத்தை சோந்த தேவப்பா கொப்பதா (வயது 62), அவரது மருமகள் கிரிஜம்மா (44), தேவப்பாவின் சகோதரர் மகள்கள் சாந்தம்மா (35), பார்வதம்மா (32), உறவினரான கஸ்தூரம்மா (20) ஆகியோர் என்று தெரிந்தது. படுகாயம் அடைந்தவர்கள் ஹர்ஷவர்த்தன், புட்டராஜ் (7), பூமிகா (5), பல்லவி (28) என்று தெரியவந்துள்ளது. இவர்களில் ஹர்ஷவர்த்தன் தான் காரை ஓட்டி சென்றிருந்தார்.
தேவப்பா தனது குடும்பத்துடன் கொப்பல் டவுனில் நடந்த உறவினர் குழந்தையின் பிறந்தநாளில் பங்கேற்றுவிட்டு பின்னாலே கிராமத்திற்கு திரும்பிய போது கார் மீது லாரி மோதியதில், 5 பேர் பலியானது தெரியவந்துள்ளது. லாரியை டிரைவர் அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து குகனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரை வலைவீசி தேடிவருகிறார்கள்.
தலா ரூ.5 லட்சம் நிவாரணம்
இந்த விபத்தில் பலியான 5 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.