பஞ்சாப் : கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை


பஞ்சாப் : கடன் பிரச்சினையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் தற்கொலை
x
தினத்தந்தி 1 Jan 2024 3:57 PM IST (Updated: 1 Jan 2024 5:04 PM IST)
t-max-icont-min-icon

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சண்டிகர்,

பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள டிரோலி குர்த் கிராமத்தை சேர்ந்தவர் மன்மோகன் சிங் (வயது 55). இவர் ஆதம்பூர் தபால் நிலையத்தின் பொறுப்பாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சரப்ஜித் கோர். இவர்கள் ஜோதி (வயது 32), கோபி (வயது 31) ஆகிய இரு மகள்களுடன் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் மூத்த மகளுக்கு திருமணமாகி கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் தனது 3 வயது குழந்தையுடன் தந்தை வீட்டில் வசித்து வந்தார். மன்மோகன் சிங் சிலரிடம் கடன் பெற்றிருந்தார். பணத்தை கொடுத்தவர்கள் கடனை திருப்பி கேட்டு அவர்களை தொந்தரவு செய்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று இரவு ஜோதியின் கணவர் மஞ்சீத் சிங் அவர்களை போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் யாரும் போனை எடுக்காததால் சந்தேகித்து வீட்டிற்கு சென்றார். அங்கு சென்று பார்த்த போது ஜோதி, கோபி மற்றும் 3 வயது குழந்தையுடன் ஒரு அறையில் இறந்த நிலையில் கிடந்தனர். மேலும் இன்னொரு அறையில் மன்மோகன் சிங் மற்றும் அவரது மனைவி இருவரும் தூக்கிட்டு இறந்த நிலையில் கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து மஞ்சீத் சிங் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்து உயிரிழந்தவர்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

சம்பவ இடத்தில் இருந்து தற்கொலைக்கான கடிதம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதில் தனக்கு ஏற்பட்ட கடன் பிரச்சினையால் இந்த முடிவை எடுத்ததாக அக்கடித்ததில் கூறியிருந்தார். மேலும் உயிரிழந்தவர்கள் ஜோதி, கோபியின் கழுத்தில் காயம் இருந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story