அரியானாவில் வன்முறை: பதற்றம் நீடிப்பு - ஊரடங்கு அமல்
அரியானாவில் வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. பதற்றம் தொடர்ந்து நீடிக்கும் நிலையில், நூ மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
குருகிராம்,
அரியானா மாநிலம் நூ மாவட்டத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ஊர்வலத்தில் சிலர் கல் வீசித் தாக்கினர்.
அதைத்தொடர்ந்து இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதல், பயங்கர வன்முறையாக மாறியது.
வாகனங்களுக்கு தீவைக்கப்பட்டதுடன், கும்பல் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டதில் 2 ஊர்க்காவல் படை வீரர்கள் குண்டு பாய்ந்து உயிரிழந்தனர். ஏராளமான போலீசார் காயமடைந்தனர்.
நூ மாவட்டத்தில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்ததால் அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இணைய சேவை முடக்கப்பட்டது.
பலி எண்ணிக்கை உயர்வு
நூ மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான குருகிராமுக்கும் வன்முறை பரவியது. அங்கு செக்டார் 57 பகுதியில் உள்ள மசூதிக்கு நள்ளிரவில் ஒரு கும்பல் தீவைத்தது. மேலும் அந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் குண்டு காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 26 வயதான அந்த வாலிபர், பீகாரை சேர்ந்தவர் என தெரியவந்தது.
இதற்கிடையில் நூ மாவட்டத்தில் நேற்று முன்தினம் நடந்த வன்முறையில் காயமடைந்த மேலும் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது.
ஊரடங்கு அமல்
நூ மாவட்டத்தில் 50 போலீஸ் வாகனங்கள் உள்பட 120 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன, தீவைக்கப்பட்டன. 10 போலீசார் உள்பட 23 பேர் காயமடைந்தனர். வன்முறை தொடர்பாக 27 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். அந்த மாவட்டத்தில் நேற்று ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், 'திட்டமிட்டு வன்முறை நடத்தப்பட்டுள்ளது. இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்' என அரியானா உள்ளாட்சித்துறை மந்திரி அனில் விஜ் தெரிவித்தார்.
புதிதாக வன்முறை இல்லை
நூ மாவட்டத்திலும், குருகிராமின் சோனா நகரிலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. ஆனால் நேற்று புதிதாக வன்முறை சம்பவங்கள் நிகழவில்லை. பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏராளமான போலீசாரும், துணை ராணுவ படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். நூ மாவட்டத்தில் போலீசார் கொடி அணிவகுப்பும் நடத்தினர். நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அனைத்து மத வழிபாட்டுத் தலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முதல்-மந்திரி வேண்டுகோள்
நூ, பரிதாபாத் மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) வரை இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, குருகிராம், பரிதாபாத், பல்வால் மாவட்டங்களில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.
இந்த நிலையில் முதல்-மந்திரி மனோகர் லால் கட்டார் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், 'அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று கூறியுள்ளார்.