100 மீட்டர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு


100 மீட்டர் பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு
x

இமாச்சலப் பிரதேசம் காங்க்ராவில் 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

தர்மசாலா,

இமாச்சலப் பிரதேசம் மாநிலம் காங்க்ரா மாவட்டத்தில் உள்ள தர்மசாலா அருகே 100 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் லாரி கவிழ்ந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உட்பட 5 பேர் உயிரிழந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் ராசேஹர் கிராமத்தில் இந்த விபத்து நடந்துள்ளது. கோதுமை ஏற்றிச் சென்ற லாரி, உததாகரன் பஞ்சாயத்து அருகே அணுகு சாலை வழியாக சென்றபோது பள்ளத்தாக்கில் விழுந்தது. இந்த விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

விபத்து குறித்து தகவலறிந்து மாவட்ட நிர்வாகம், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு தாண்டா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இமாச்சல பிரதேச முதல்-மந்திரி சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்திய அவர், சிறந்த சிகிச்சை அளிக்க மருத்துவமனை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

தர்மசாலா எம்எல்ஏ சுதிர் சர்மா, அறிவுறுத்தலின் பேரில், தாசில்தார் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.25,000 நிவாரணம் வழங்கினார்.


Next Story