கூட்டுறவு வங்கியில் 5 கிலோ நகைகள், ரூ.14 லட்சம் கொள்ளை


கூட்டுறவு வங்கியில் 5 கிலோ நகைகள், ரூ.14 லட்சம் கொள்ளை
x
தினத்தந்தி 28 Nov 2022 12:15 AM IST (Updated: 28 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் 5 கிலோ தங்க நகைகள், ரூ.14 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்த துணிகரம் நடந்துள்ளது. வடமாநில கும்பல் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

தொட்டபள்ளாப்புரா:

கர்நாடக கிராம வங்கி

பெங்களூரு புறநகர் மாவட்டம் தொட்டபள்ளாப்புரா தாலுகா ஒசஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கர்நாடக கிராம கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நகைக்கடன், விவசாயக்கடன் உள்பட ஏராளமான செயல்பாடுகள் நடந்து வந்தன. தொட்டபள்ளாப்புரா தாலுகாவில் உள்ள கிராமங்களில் வசிக்கும் ஏராளமான விவசாயிகள் இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளனர். மேலும் விவசாயத்திற்காக தங்க நகைகளை அடகு வைத்து விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் கடன் பெற்றிருந்தார்கள்.

கடந்த 25-ந் தேதி மாலையில் வங்கியை பூட்டிவிட்டு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சென்றிருந்தார்கள். நேற்று முன்தினம் 4-வது சனிக்கிழமை என்பதாலும், நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், வங்கிக்கு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை ஆகும். இந்த நிலையில், கடந்த 25-ந் தேதி நள்ளிரவில் வங்கியின் முன்பக்க இரும்பு கதவை கியாஸ் கட்டர் மூலமாக வெட்டியும், உடைத்தும் மர்மநபர்கள் உள்ளே புகுந்திருந்தனர்.

நகை, பணம் கொள்ளை

பின்னர் வங்கியின் லாக்கரை உடைத்த மர்மநபர்கள் உள்ளே இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்று விட்டார்கள். நேற்று முன்தினம் வங்கியின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக அவர்கள் ஒசஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் போலீசார் விரைந்து வந்தனர்.

பின்னர் வங்கியில் பதிந்திருந்த மர்மநபர்களின் கைரேகைகளை, கைரேகை நிபுணர்கள் பதிவு செய்து கொண்டனர். மோப்ப நாய், வங்கி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்பம் பிடித்தபடி ஓடியது. முன்னதாக இதுபற்றி தகவல் அறிந்ததும் பெங்களூரு புறநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் வங்கியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள்.

5 கிலோ தங்க நகைகள்

அப்போது வங்கியின் லாக்கரில் இருந்த 5 கிலோ தங்க நகைகள், ரூ.14 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் வங்கியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி போலீசர் ஆய்வு நடத்தினார்கள். அதில், 4 மர்மநபர்கள் முகமூடி அணிந்து கொண்டு வங்கிக்குள் புகுந்து, நகை, பணத்தை கொள்ளையடித்து செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தது.

லாக்கரை உடைத்தால், எச்சரிக்கை மணி ஒலிக்கும் வசதிகள் செய்யப்பட்டு இருந்தது. ஆனால் கொள்ளையர்கள் லாக்கரை உடைக்கும் போது எச்சரிக்கை மணி எதுவும் ஒலிக்கவில்லை என்று அக்கம்பக்கத்தில் வசிப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதுபற்றி போலீசாருக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பி இருக்கிறது.

8 தனிப்படைகள் அமைப்பு

இதுகுறித்து போலீஸ் சூப்பிரண்டு மல்லிகார்ஜுன் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், கர்நாடக கிராம வங்கியில் முகமூடி அணிந்து வந்த 4 கொள்ளையர்கள் இந்த சம்பவத்தை திட்டமிட்டு அரங்கேற்றி உள்ளனர். வங்கிக்கு 2 நாட்கள் விடுமுறை இருப்பது அறிந்து கடந்த 25-ந் தேதி நள்ளிரவு கியாஸ் கட்டர் பயன்படுத்தி முன்பக்க இரும்பு கதவை திறந்து, நகைகள், பணத்தை கொள்ளையடித்து சென்றிருக்கிறார்கள்.

கொள்ளையர்களை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் வங்கி மற்றும் அதை சுற்றியுள்ள கண்காணிப்பு கேமராக்களை கைப்பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். வங்கியில் பதிவான காட்சிகள் மூலமாகவும் கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடிய விரைவில் கொள்ளையர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றார்.

வடமாநில கொள்ளையர்கள்

வங்கியில் கொள்ளை நடந்திருப்பது பற்றி அறிந்ததும், அங்கு தங்க நகைகளை அடகு வைத்திருந்த விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்தனர். அவர்களிடம் தங்க நகைகள், பணம் மீட்கப்படும் என்றும், யாரும் அச்சப்பட வேண்டிய அவசியமில்லை என்றும் வங்கி அதிகாரிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கூறினார்கள். மேலும் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

வடமாநில கொள்ளையர்கள் இந்த கொள்ளையில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிரமாக விசாரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுகுறித்து ஒசஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாகி விட்ட கொள்ளையர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த கொள்ளை சம்பவம் பெங்களூரு புறநகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story