ஜம்மு: பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் குண்டுவெடிப்பு - 4 வயது சிறுவன் பலி
ஜம்முவில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடந்த இடத்தில் இன்று குண்டுவெடித்தது. இதில், 4 வயது சிறுவன் உயிரிழந்தான்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜம்முவின் ரஜோரி மாவட்டம் டோங்கிரி கிராமத்தில் நேற்று பயங்கரவாத தாக்குதல் நடைபெற்றது.
கிராமத்திற்குள் நேற்று 7 மணியளவில் புகுந்த 2 பயங்கரவாதிகள் அடுத்தடுத்து இருந்த 3 வீடுகளுக்குள் புகுந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் சதீஷ் குமார் (வயது 45), தீபக் குமார் (வயது 23), பிரித்தம் லால் (வயது 57), ஷிஷூ பல் (வயது 32) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.
டோங்கிரி கிராமத்தில் உள்ள இந்து மதத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்திய 2 பயங்கரவாதிகளும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பாதுகாப்பு படையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஜம்மு-காஷ்மீரில் சிறுபான்மையினராக உள்ள இந்து மதத்தினரை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதல் சம்பவத்தையடுத்து டோங்கிரி கிராமத்திற்கு என்.ஐ.ஏ. அதிகாரிகள் விரைந்துள்ளனர்.
இந்நிலையில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய ஒரு வீட்டிற்கு அருகே இன்று குண்டு வெடித்துள்ளது. இந்த குண்டுவெடிப்பில் விஹன் குமார் (வயது 4) என்ற சிறுவன் உயிரிழந்தான். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று தாக்குதல் நடந்த பகுதியில் ஒரு பையில் பயங்கரவாதிகள் ஐஇடி வெடிகுண்டை வைத்து சென்றுள்ளனர். அந்த வெடிகுண்டு இன்று வெடித்ததில் சிறுவன் விஹன் குமார் உயிரிழந்தான்.
பயங்கரவாத தாக்குதலில் ஏற்கனவே 4 பேர் உயிரிழந்த நிலையில் இன்று ஒரு சிறுவன் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.
டோங்கிரி கிராமத்தில் உள்ள 3 வீட்டிற்குள் நுழைந்த பயங்கரவாதிகள் அங்கிருந்தவர்களில் ஆதார் அட்டைகளை வாங்கி பார்த்து அவர்கள் இந்து மதத்தினர் என்பதை உறுதி செய்த பின் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அதை தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பில் டோங்கிரி கிராமத்தில் சிறுவன் உள்பட பொதுமக்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.