பெங்களூரு அருகே 4 துணை நகரங்கள் அமைக்கப்படும்; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவிப்பு
பெங்களூரு அருகே 4 துணை நகரங்கள் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு அருகே 4 துணை நகரங்கள் அமைக்கப்படும் என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார்.
திடக்கழிவு மேலாண்மை
பெங்களூருவில் நேற்று ஒரு தனியார் செய்தி நிறுவனம், 'பெங்களூரு-2040' என்ற பெயரில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்து கொண்டு பேசியதாவது:-
எதிர்கால பெங்களூரு நிறுவுவது மற்றும் பழைய பெங்களூருவை சரிசெய்வது என 2 திட்டங்கள் தேவைப்படுகிறது. இதற்கு அதிகளவில் முதலீடு செய்ய வேண்டியது அவசியம். திடக்கழிவு மேலாண்மை, பாதாள சாக்கடை, ராஜகால்வாய்கள், சாலைகளை அமைப்பது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைப்பது, பொது போக்குவரத்தை அதிகரிப்பது, புறநகர் ரெயில் திட்டத்தை அமல்படுத்துவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
போக்குவரத்து நெரிசல்
நகரில் போக்குவரத்து நெரிசலை நிர்வகிக்க தனியாக கமிஷனரகம் அமைத்துள்ளோம். இதனால் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. சிக்னல் முறையை சீர்செய்வது, கூடுதல் சாலைகளை அமைப்பது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரியாக மேற்கொள்ள அதில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறோம்.
இதன் மூலம் அந்தந்த வார்டுகளில் சேரும் குப்பைகள் அதே வார்டில் மறுசுழற்சி செய்யப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். வணிக வளாகம், மார்க்கெட், ஆஸ்பத்திரி, உணவகங்கள், ஓட்டல்களில் திடக்கழிவு மேலாண்மைக்கு தேவையான எந்திரங்களை அமைத்து கொள்ளும்படி உத்தரவிடப்படும். 3-வது கட்ட பெங்களூரு மெட்ரோ ரெயில் திட்டத்திற்கு ரூ.26 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
துணை நகரங்கள்
புறநகர் ரெயில் திட்ட பணிகள் தொடங்கியுள்ளன. பெங்களூரு அருகே 4 இடங்களில் துணை நகரங்கள் அமைக்கப்படுகின்றன. பெலகாவி, கலபுரகி, பல்லாரி, தாவணகெரேயில் சாலைகள் தரமாக உள்ளன. சிவமொக்கா, ஹாசன், விஜயாப்புராவில் விரைவில் விமான நிலையங்கள் திறக்கப்படுகின்றன. உலகிலேயே அதிக ஆராய்ச்சி நிறுவனங்கள் பெங்களூருவில் தான் உள்ளன.
மின்சார வாகன ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனங்கள் கர்நாடகத்தில் உள்ளன. அதன் வளர்ச்சி பிற மாநிலங்களில் நடக்கின்றன. அடுத்த மாதம் விமான கண்காட்சி பெங்களூருவில் நடக்கிறது. விமானங்களை உற்பத்தி செய்யும் அளவுக்கு பெங்களூரு வளர்ந்து வருகிறது. பெங்களூருவில் 8 நகரசபைகள் சேர்க்கப்பட்டன. அந்த நகராட்சிகள் மேம்படுத்தப்படவில்லை. 110 கிராமங்கள் சேர்க்கப்பட்டன. அதனால் அந்த பகுதிகளில் அடிப்படை பிரச்சினைகள் உள்ளன. இது தான் முக்கிய பிரச்சினையாக உள்ளது.
தீர்வு காண நடவடிக்கை
பெங்களூருவில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் மேற்கொள்ளப்படும். பெங்களூருவில் ஆண்டுக்கு 2 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகின்றன. அடிப்படை பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன் 'பிராண்டு பெங்களூரு'வை நாம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.