மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு


மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு
x

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மந்திரிசபை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய மந்திரி பியூஷ் கோயல் ,

தற்போது, அடிப்படை சம்பளத்தில் 46 சதவீதமாக அகவிலைப்படி உள்ளது. இனிமேல், அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதமாக இருக்கும்.கடந்த ஜனவரி 1-ந்தேதி முதல் கணக்கிட்டு அகவிலைப் படி உயர்வு வழங்கப்படும்.

அகவிலைப்படி உயர்வால், மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரத்து 869 கோடி செலவாகும். இதனால், 49 லட்சத்து 18 ஆயிரம் மத்திய அரசு ஊழியர்களும், 67 லட்சத்து 95 ஆயிரம் ஓய்வூதியதாரர்களும் பலன் அடைவார்கள்.

அகவிலைப்படி உயர்வுடன், பயணப்படி, உணவக படி, அயற்பணி ஆகியவை 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. வீட்டு வாடகைப்படி, அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம்வரை உயர்த்தப்பட்டுள்ளது.மேலும் பணிக்கொடை பலன்கள் 25 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன் உச்சவரம்பு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதர படிகள் உயர்வால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு ரூ.9 ஆயிரத்து 400 கோடி செலவாகும்.

'இந்தியா ஏ.ஐ. மிஷன்' என்ற புதிய திட்டத்துக்கும் மத்திய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. 5 ஆண்டுகள் அமல்படுத்தப்படும் இத்திட்டத்துக்கு ரூ.10 ஆயிரத்து 372 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிதி, பெருமளவில் கம்ப்யூட்டர் உள்கட்டமைப்பை உருவாக்க பயன்படுத்தப்படும். செயற்கை நுண்ணறிவு சூப்பர் கம்ப்யூட்டர் உள்கட்டமைப்பும் உருவாக்கப்படும்.என தெரிவித்தார்.


Next Story