அஜித் பவார் கட்சியில் இருந்து 4 பேர் விலகி சரத் பவார் அணியில் சேர்ந்தனர்...மராட்டிய அரசியலில் திருப்பம்
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித்பவார் தலைமையிலான கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அஜித் பவார் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பலர் ஆளும் சிவசேனா, பா.ஜனதா கூட்டணி அரசில் கடந்த 2023-ம் ஆண்டு இணைந்தனர்.
இதையடுத்து அஜித் பவார் துணை முதல்-மந்திரி ஆனார். ஆனால் சரத் பவார் இதை ஏற்றுக்கொள்ளாததால் தேசியவாத காங்கிரஸ் 2-ஆக உடைந்தது. இந்த பிளவுக்கு பிறகு நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 4 தொகுதிகளில் போட்டியிட்ட அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியால் ஒரு இடத்தை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. 10 தொகுதிகளில் போட்டியிட்ட சரத் பவார் கட்சி 8 இடங்களில் அமோக வெற்றி பெற்றது.
அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரசின் படுதோல்வியை தொடர்ந்து அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், சரத்பவாரின் அணியுடன் தொடர்பில் இருப்பதாகவும் விரைவில் அவர்கள் அணி மாறுவார்கள் என்றும் தகவல் பரவி வந்தது.
இந்த நிலையில் நேற்று அஜித் பவார் அணியை சேர்ந்த பிம்ப்ரி- சின்ச்வாட் நகர பிரிவு தலைவர் அஜித் கவ்கானே தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருடன் பிம்ப்ரி-சின்ச்வாட் மாணவர் பிரிவு தலைவர் யாஷ் சானே மற்றும் முன்னாள் கவுன்சிலர்கள் 2 பேரும் ராஜினாமா செய்தனர். அவர்கள் அனைவரும் சரத் பவார் முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்தனர்.