தார்வாரில் இரட்டை கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது


தார்வாரில் இரட்டை கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 28 May 2023 12:15 AM IST (Updated: 28 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தார்வாரில் நடந்த இரட்டை கொலை வழக்கில் தந்தை-மகன் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.

உப்பள்ளி:

இரட்டை கொலை

தார்வார் (மாவட்டம்) டவுன் கமலாப்புரா பகுதியில் வசித்து வந்தவர் முகமது குடசி(வயது 35). இவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 5 பேர் கும்பல் முகமது குடசியை அரிவாள் உள்ளிட்ட கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்தனர். இதற்கிடையே முகமது குடசியின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் இன்னொரு வாலிபர் இறந்து கிடந்தார்.

அவரும் கால் மற்றும் உடலில் வெட்டுக்காயங்களுடன் இருந்தார். இதனால் அவரை மர்ம நபர்கள் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாருக்கு தெரியவந்தது. இந்த இரட்டை கொலை சம்பவம் குறித்து தார்வார் வித்யாகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

பிரபல ரவுடி

இதில் முகமது குடசிக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பிரபல ரவுடியான இர்பான் என்பவருக்கும் ரியல் எஸ்டேட் தொழில் மற்றும் பணம் கொடுக்கல், வாங்கல் தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததும், அதன்காரணமாக இர்பான், தனது மகன் அர்பாஜ் அஞ்சனால், கூட்டாளிகள் ரஹீம், நதீம், கணேஷ் ஆகியோருடன் சேர்ந்து முகமது குடசியை கோடரி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்ததும் தெரியவந்தது.

மேலும் இந்த சம்பவத்தில் கால் மற்றும் உடலில் வெட்டுக்காயம் அடைந்த இர்பானின் கூட்டளியான கணேஷ் முகமது குடசியின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் செத்து கிடந்ததும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

4 பேர் கைது

மேலும் இர்பான் தனது மகன் மற்றும் கூட்டாளிகளுடன் உத்தர கன்னடா மாவட்டத்தில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. அதையடுத்து போலீசார் உத்தர கன்னடா மாவட்டத்திற்கு சென்று இர்பான், அவரது மகன் அர்பாஜ் அஞ்சனால், ரஹீம், நதீம் ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை தார்வாருக்கு அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.


Next Story