இந்து அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது


இந்து அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில்  4 பேர் கைது
x

இந்து அமைப்பு பிரமுகர் கொலை வழக்கில் பா.ஜனதா கவுன்சிலரின் சகோதரர் உள்பட மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

மைசூரு:-

இந்து அமைப்பு பிரமுகர் கொலை

மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா டவுன் ஸ்ரீராம்புராவை சேர்ந்தவர் வேணுகோபால் (வயது 32). இந்து அமைப்பு பிரமுகர். இந்த நிலையில் கடந்த 8-ந்தேதி டி.நரசிப்புரா டவுனில் அனுமன் ஜெயந்தி ஊர்வலம் நடந்தது. அப்போது ஊர்வல வாகனத்தில் சிலர் நடிகர் புனித் ராஜ்குமார் படத்தை வைக்க முயன்றனர். இதற்கு வேணுகோபால் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் வேணுகோபால் தரப்புக்கும், மற்றொரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு வேணுகோபால் பீர்பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அதேப்பகுதியை சேர்ந்த மணிகாந்த், சந்தேஷ் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் 4 பேர் கைது

இந்த நிலையில் இந்து அமைப்பு பிரமுகர் வேணுகோபால் கொலை வழக்கில் மேலும் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் அனில், துப்பா என்ற சங்கர், மஞ்சு, ஹாரீஸ் என்பது தெரியவந்தது. இவர்களில் துப்பா என்கிற சங்கர் மைசூரு மாநகராட்சி பா.ஜனதா கவுன்சிலரின் சகோதரர் ஆவார்.

முன்விரோதம் காரணமாக அவர்கள் 6 பேரும் சேர்ந்து வேணுகோபாலை தீர்த்துக்கட்டியது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

பா.ஜனதா தலைவர்கள் ஆறுதல்

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட வேணுகோபாலின் வீட்டுக்கு நேற்று பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, பிரதாப் சிம்ஹா எம்.பி., அஸ்வத் நாராயண், எம்.எல்.ஏ. ஸ்ரீவத்சவா மற்றும் பா.ஜனதா தலைவர்கள் சென்றனர். அவர்கள் வேணுகோபாலின் மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.


Next Story