பாலியல் வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் 4 மாணவிகள் பலாத்கார புகார்


பாலியல் வழக்கில் கைதான முருக மடாதிபதி மீது மேலும் 4 மாணவிகள் பலாத்கார புகார்
x

சித்ரதுர்கா முருக மடாதிபதியின் மீது மேலும் 4 மாணவிகள் பாலியல் புகாா் அளித்துள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக 7 பேர் மீது சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பெங்களூரு:

முருக மடாதிபதி

சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ளது முருக மடம். இந்த மடத்தின் மடாதிபதியாக இருந்து வந்தவர் சிவமூா்த்தி முருகா சரணரு. இவர் மடத்தில் உள்ள பள்ளியில் பயிலும் 2 மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்ததாக மைசூரு நஜர்பாத் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து அந்த புகார் சித்ரதுர்கா போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது. அந்த புகாரின் பேரில் போலீசார் மடாதிபதி சிவமூர்த்தி முருகா சரணரு மற்றும் பெண் வார்டன் பசவாத்தியா, மைசூரு சீடர் பரமசிவய்யா, கங்காதரய்யா, பசவலிங்கா ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதன்படி கடந்த மாதம் (செப்டம்பர்) 1-ந்ேததி மடாதிபதியை போக்சோ வழக்கில் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இதை தொடர்ந்து மற்ற 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிைலயில் முருக மடாதிபதி தனக்கு ஜாமீன் வழங்கும்படி சித்ரதுர்கா 2-வது கூடுதல் மாவட்ட கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜாமீன் வழங்க முடியாது என்று தள்ளுபடி செய்தார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி முருக மடாதிபதியின் நீதிமன்ற காவல் முடிந்தது. அப்போது அவரை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். போலீசார் தரப்பில் முருக மடாதிபதியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி வருகிற 21-ந் தேதி வரை அவரது நீதிமன்ற காவலை நீட்டித்து உத்தரவிட்டார்.

மேலும் 4 மாணவிகள் புகார்

இந்த நிலையில் அதே மடத்தில் படித்து வந்த மேலும் 4 மாணவிகள் முருக மடாதிபதியின் மீது பாலியல் பலாத்கார புகார் அளித்தனர். அதில் அதே மடத்தில் உள்ள பள்ளியில் சமையல் ஊழியராக பணியாற்றி வந்த பெண்ணின் 2 மகள்களும் அடங்குவர். முதலில் மாணவிகள் 4 பேர் தரப்பிலும் மைசூரு நஜர்பாத் போலீசில் தான் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரை ஏற்ற போலீசார் சித்ரதுர்கா புறநகர் போலீஸ் நிலையத்திற்கு மாற்றினர். இந்த புகாரை போலீசார் ஏற்று கொண்டனர்.

அந்த புகார் மனுவில் பாதிக்கப்பட்ட 2 மாணவிகளின் தாய் கூறியிருப்பதாவது:- கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்ப வறுமை காரணமாக 2 மகள்களுடன் முருக மடத்திற்கு வந்து வேலைக்கு சேர்ந்தேன். அங்கு சமையல் செய்யும் வேலை செய்து வந்தேன். அதே மடத்தில் 2 மகள்களும் தங்கி படிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே அவர்களை மடத்தின் இருந்த பள்ளியிலேயே சேர்த்தேன். தற்போது முதல் மகள் 3-ம் வகுப்பும், 2-வது மகள் முதலாவது வகுப்பும் படித்து வருகின்றனர். ஒரே மடத்திற்குள் இருந்தாலும் மகள்களை பார்ப்பதற்கு அனுமதி வழங்குவது இல்லை. மதிய உணவு இடைவேளை அல்லது விடுதிக்கு வரும்போது பார்த்து கொள்ள கால அவகாசம் வழங்கப்படும்.

பலாத்காரம்

இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மூத்த மகளை முருக மடாதிபதியை பார்ப்பதற்காக அவரது அறைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் பலாத்காரம் செய்தார். இதையடுத்து 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் 2-வது மகளை மிரட்டி பலாத்காரம் செய்தார். கடந்த 2, 3 ஆண்டுகளாக தொடர்ந்து 2 பேரையும் மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். குறிப்பாக மகள்கள் வயதுக்கு வரும்வரை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இதேபோல மைசூருவை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய 2 மாணவிகளையும் மடாதிபதி பலாத்காரம் செய்துள்ளார். இவர்கள் மறுப்பு தெரிவித்தால் மடத்தில் பணியாற்றி வரும் பரமசிவய்யா, கங்காதரையா, மடாதிபதியின் உதவியாளர் மகாலிங்கம், சமையல் ஊழியர் கரியபசப்பா ஆகியோர் மிரட்டி பாலியல் பலாத்காரத்திற்கு அடிபணிய வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வெளியே கூற கூடாது என்று மிரட்டியுள்ளனர். எனவே இந்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.

7 பேர் மீது வழக்கு

அந்த புகாரின் பேரில், ஏற்கனவே கைதாகியுள்ள 5 பேர் மற்றும் புதியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மடத்தின் ஊழியர்களான கரியபசப்பா, மகாலிங்கம் ஆகிய 7 பேர் மீது சித்ரதுர்கா புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள கரியபசப்பா மற்றும் மகாலிங்கத்தை போலீசார் தேடி வருகின்றனர்.

இதனால் இந்த பாலியல் வழக்கில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story