என்ஜினீயர் வீட்டில் 4 கணினிகள் திருட்டு; மா்மநபர்களுக்கு வலைவீச்சு
சிக்கமகளூரு டவுன் அருகே என்ஜினீயர் வீட்டில் 4 கணினிகள் திருடிய மா்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
சிக்கமகளூரு;
சிக்கமகளூரு டவுன் கதிரிமிதிரி கிராமத்தில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரி ஒன்று கட்டப்பட்டு வருகிறது. அந்த கட்டிடத்தின் கட்டுமான என்ஜினீயராக தாவணகெரேவை சேர்ந்த பிரதீப் என்பவர் டெண்டர் எடுத்து வேலை செய்து வருகிறாா்.
அதற்காக அவர் அதே பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றார். அப்போது அவரது வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள், அவா் வைத்திருந்த 4 கணினிகள் மற்றும் அதன் உதிரிபாகங்களை திருடிவிட்டு தப்பி சென்றனர்.
வீட்டிற்கு வந்த பிரதீப், கணினிகள் காணாமல் போனது குறித்து அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து கணினிகளை திருடி சென்றது தெரியவந்தது. உடனே அவர் இதுகுறித்து சிக்கமகளூரு டவுன் போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் திருட்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருடப்பட்ட பொருட்களின் மதிப்பு ரூ.1.30 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.