உ.பி.யில் கட்டாய மதமாற்றம்; 16 வயது சிறுவனை மயக்கி 24 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது!


உ.பி.யில் கட்டாய மதமாற்றம்; 16 வயது சிறுவனை மயக்கி 24 வயது பெண்ணுக்கு திருமணம் செய்து வைத்த 4 பேர் கைது!
x

அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து சென்று விட்டார்.

கான்பூர்,

உத்தரபிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் உணவகத்தில் பணிபுரிந்து வருகிறான். இந்நிலையில், அந்த சிறுவனுக்கு சமூக ஊடகம் மூலமாக ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

அந்த சிறுவனும் பெண்ணும் ஒரு பிரபலமான சமூக ஊடக தளம் மூலம் தொடர்பு கொண்டு, தொடர்ந்து ஒருவருக்கொருவர் அரட்டை அடித்துக் கொண்டு பழகி வந்திருக்கின்றனர்.

ஆனால், அந்த பெண்ணுக்கு ஏற்கெனவே திருமணமாகி மூன்று வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரை பிரிந்து சென்று விட்டார். இந்த விஷயத்தை மூடி மறைத்து அவர் சிறுவனுடன் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமையன்று அந்த சிறுவன் கடைக்கு வேலைக்கு சென்றுள்ளான். அதன் பின்னர், ஞாயிற்றுக்கிழமை அன்று வீடு திரும்பிய அவன், தனது தாயிடம் தான் பழகிவரும் சிம்ரன் என்ற அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளான்.

ஆனால், அங்கு அவனுக்கு சாப்பிட கொடுக்கப்பட்ட உணவில் ஏதோ கலந்திருந்ததால், அதன் பிறகு அவனுக்கு மயக்கம் ஏற்பட்டது என்று தெரிவித்துள்ளான். பின்னர் அவனை இஸ்லாம் மதத்திற்கு மாறிக் கொள்ளுமாறும், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளவும் அங்கிருந்தவர்கள் வற்புறுத்தினர் என்று தனது தாயாரிடம் கூறினான்.

இதனை அவனது தாயார் போலீசில் தெரிவித்தார். மேலும் இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதை அடுத்து சிறுவனை வற்புறுத்தியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

போலீஸ் விசாரணையில், அந்த மைனர் தலித் சிறுவனை கடத்தி வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததாகக் கூறி முகமது ஹனிப் (42), அவரது மனைவி ஜமீலா பானோ (40) மற்றும் அவர்களது மகள் சிம்ரன் (24) மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த முஸ்லிம் மதகுரு தவ்ஹீத் (52) ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது சட்டத்திற்குப் புறம்பாக செயல்பட்டதாக, மத மாற்றத் தடைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.


Next Story