அடுத்த மக்களவை தேர்தலில் 3-வது முன்னணிக்கு சாத்தியமில்லை: ஒடிசா முதல்-மந்திரி


அடுத்த மக்களவை தேர்தலில் 3-வது முன்னணிக்கு சாத்தியமில்லை:  ஒடிசா முதல்-மந்திரி
x

2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் 3-வது முன்னணிக்கு சாத்தியமில்லை என்று ஒடிசா முதல்-மந்திரி டெல்லியில் இன்று கூறியுள்ளார்.

புதுடெல்லி,

ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் டெல்லிக்கு இன்று வருகை தந்து உள்ளார். அவர் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து மாநில வளர்ச்சிக்கு தேவையான விசயங்கள் பற்றி உரையாடி உள்ளார்.

ஒடிசாவின் பூரி, புவனேஸ்வர் ஆகிய நகரங்களில் சர்வதேச விமான நிலையம் அமைப்பது பற்றி அவர் பேசியுள்ளார். அதிக நெருக்கடியால், அதனை விரிவாக்கம் செய்ய விரும்பினோம் என அவர் கூறியுள்ளார்.

சாத்தியப்பட்ட ஒவ்வொரு வழியிலும் நிச்சயம் உதவுவேன் என பிரதமர் கூறினார் என்று செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

வரவிருக்கிற 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலில், 3-வது முன்னணி அமைவது பற்றியும், எதிர்க்கட்சிகளை சில தலைவர்கள் ஒன்றிணைக்க மேற்கொண்டு வரும் முயற்சிகள் பற்றியும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த அவர், எனக்கு தெரிந்து அதற்கான சாத்தியமில்லை. தற்போது இல்லை என பதிலளித்து உள்ளார். கடந்த செவ்வாய் கிழமை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமாரை சந்தித்தது பற்றி கேட்டதற்கு, அது மரியாதை நிமித்தம் நடந்த சந்திப்பு என கூறினார்.

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான பா.ஜ.க.வை எதிர்கொள்ளும் வகையில், பல்வேறு மாநில கட்சி தலைவர்களை பீகார் முதல்-மந்திரி நிதிஷ் குமார் அடுத்தடுத்து நேரில் சந்தித்து பேசி வருகிறார்.

இதற்காக, கடந்த ஏப்ரல் மாத தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் உள்ளிட்டோரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த சூழலில், மேற்கு வங்காளத்தின் ஹவுரா நகரில், முதல்-மந்திரி மம்தா பானர்ஜியை, நிதிஷ் குமார் மற்றும் பீகார் துணை முதல்-மந்திரி தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏப்ரல் இறுதியில் (24-ந்தேதி) நேரில் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்பை தொடர்ந்து, சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவை சந்திக்க நிதிஷ் குமார் புறப்பட்டு செல்கிறார் என தகவல் வெளியானது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர், பாட்னா நகரில் எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களுடன் சந்திப்பை நடத்தும் திட்டம் ஒன்றையும் சமீபத்தில் அவர் வெளியிட்டார். அதில், 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான திட்டங்களை வகுப்பது பற்றி ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், மும்பை சென்று மூத்த எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து கூட்டங்களை நடத்த அவர் முடிவு செய்து உள்ளார். இதன்படி வருகிற இன்று மதியம் மும்பை சென்ற அவர், மும்பை மலபார் ஹில் நகரில் சில்வர் ஓக்ஸ் பகுதியில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். ஐக்கிய ஜனதா தளத்தின் மராட்டிய தலைவர் கபில் பாட்டீல் இந்த சந்திப்பு விவரங்களை உறுதிப்படுத்தி உள்ளார்.


Next Story