கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி


கடந்த 3 நாட்களில் இந்தியா வந்த 39 விமான பயணிகளுக்கு கொரோனா உறுதி
x

கோப்புப்படம் 

கடந்த மூன்று நாட்களில் மட்டும் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டது.

புதுடெல்லி,

சீனா உள்பட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, கடந்த 24-ந் தேதி முதல் இந்தியாவில் உள்ள விமான நிலையங்களுக்கு வரும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

அதன்படி டிசம்பர் 24,25 மற்றும் 26 ந் தேதிகளில் 498 விமானங்களில் வந்த பயணிகளிடம் கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டன. அதன்படி மொத்தம் 1,780 மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த பரிசோதனை முடிவில் 39 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் அவர்களுக்கு பி.எப்.7 ரக கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை கண்டறிய மரபணு சோதனைமுறை நடத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா நெருக்கடியை எதிர்கொள்ள தயாராகும் வகையில் நாடு முழுவதும் நேற்று பிரமாண்ட மருத்துவ ஒத்திகை நடைபெற்றது. டெல்லியில் உள்ள சப்தர்ஜங் மருத்துவமனையில் நடைபெற்ற ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா பார்வையிட்டார்.

பின்னர் பேசிய அவர், இந்தியாவில் கொரோனா பரவல் இல்லை என்பதை உறுதிப்படுத்துமாறு பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளதாக கூறினார். கொரோனா உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் இந்தியாவிலும் அது அதிகரிக்க கூடும் என்பதால் ஒட்டு மொத்த கொரோனா தடுப்பிற்கான அடிப்படைக் கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் இருப்பது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.


Next Story