மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து விபத்து - 34 பேர் காயம்
மத்திய பிரதேசத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 34 பேர் காயமடைந்துள்ளனர்.
போபால்,
மத்தியப் பிரதேசத்தின் திண்டோரி மாவட்டத்தில் உள்ள சகுல்புரா பகுதியில் இருந்து ரகோபூர் சக்கா கிராமத்தை நோக்கி தனியார் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்து கொண்டிருந்தனர்.
இந்த நிலையில், அதிகாலை 1.30 மணியளவில், கோட்வாலி பகுதியில் சாலையில் சென்ற எருமைமாட்டின் மீது பேருந்து மோதியது. இதில் பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 34-பேர் காயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இது குறித்து கோட்வாலி போலீசார் கூறுகையில், தனியார் பேருந்தில் பயணித்தவர்கள் சகுல்புரா பகுதியில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். பேருந்தின் டிரைவர் வாகனத்தை அதிவேகமாக ஓட்டியுள்ளார். பேருந்தை மெதுவாக ஓட்டுமாறு பலமுறை டிரைவரிடம் கூறியுள்ளனர்.
இந்த நிலையில், எருமை மாடு சாலையில் குறுக்கே வரும் போது அதனை காப்பாற்ற நினைத்த அவர், பேருந்தின் கட்டுப்பாட்டை இழந்து அதன் மீது மோதி உள்ளார். இதனையடுத்து அவர் சம்பவ இடத்தை விட்டு தப்பியோடி விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.