வருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
பெங்களூருவில் வருகிற 2031-ம் ஆண்டுக்குள் 317 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூரு கிருஷ்ணா இல்லத்தில் நேற்று சல்லகட்டா-கெங்கேரி, பையப்பனஹள்ளி-கே.ஆர்.புரம் இடையிலான மெட்ரோ ரெயில் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற முதல்-மந்திரி சித்தராமையா பேசியதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி, பெங்களூருவில் 2 மெட்ரோ ரெயில் திட்டங்களை உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில் இருந்தபடியே காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்துள்ளார். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினை முக்கியமானதாக மாறி உள்ளது.
இந்த போக்குவரத்து நெரிசல் பிரச்சினைக்கு தீர்வு காணும் விதமாக தான் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள் இணைந்து மெட்ரோ ரெயில் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. பெங்களூரு பையப்பனஹள்ளி-கே.ஆர்.புரம், சல்லகட்டா-கெங்கேரி இடையே கடந்த 9-ந் தேதி மெட்ரோ ரெயில் இயக்கப்பட்டாலும், அதிகாரபூர்வமாக அந்த 2 ரெயில் திட்டங்களும் தொடங்கப்பட்டு இருக்கிறது.
பெங்களூருவில் ஒட்டுமொத்தமாக 74 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. பெங்களூருவில் முதல்கட்டமாக ரூ.42.03 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் திட்டம் ரூ.14,133 கோடியில் முடிக்கப்பட்டு இருந்தது.
இந்த திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.5,630 கோடியை செலவு செய்துள்ளது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டம் 75 கிலோ மீட்டர் தூரத்தை கொண்டதாகும். இந்த 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தை நிறைவேற்ற ஒட்டுமொத்தமாக ரூ.30 ஆயிரத்து 695 கோடி தேவையாகும். 2-வது கட்ட திட்டத்தில் 32 கிலோ மீட்டருக்கான பணிகள் நிறைவு பெற்றுள்ளது.
நாகசந்திரா-மாதவாரா இடையிலான 3.14 கிலோ மீட்டர் மற்றும் ஆர்.வி.ரோடு-பொம்மசந்திரா இடையிலான 19.15 கிலோ மீட்டர் தூரத்திலான மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருக்கிறது. அந்த 2 ரெயில் திட்டங்களும் அடுத்த ஆண்டு (2024) பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். அதுபோல், காலேன அக்ரஹாரா-நாகவாரா இடையிலான 21.26 கிலோ மீட்டர் தூரம் வரையிலான மெட்ரோ ரெயில் திட்டம் 2015-ம் ஆண்டு நிறைவு பெறும்.
இந்ததிட்டங்கள் நிறைவு பெற்றால் பெங்களூருவில் 117 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும். தினமும் 12 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மெட்ரோ ரெயிலில் பயணிப்பார்கள். வருகிற 2031-ம் ஆண்டுக்குள் பெங்களூருவில் 317 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் சேவை விஸ்தரிக்கப்படும். மெட்ரோ ரெயில் 2-வது கட்ட திட்டத்திற்காக கர்நாடக அரசு ரூ.11 ஆயிரத்து 583 கோடியை ஒதுக்கி உள்ளது. 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டங்களை 2026-ம் ஆண்டுக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
சர்ஜாபுரா-ஹெப்பால் இடையிலான 37 கிலோ மீட்டர் மெட்ரோ ரெயில் திட்டம் 3-வது கட்டமாக நிறைவேற்றப்படும். பெங்களூருவில் போக்குவரத்து நெரிசல் பிரச்சினையை தீர்க்கும் விதமாக மெட்ரோ ரெயில் சேவை மாறும். இந்த திட்டங்களை நிறைவேற்ற காரணமாக இருந்த மத்திய அரசு, பிரதமர் மோடி, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.