நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்; 3 வாலிபர்கள் பலி
நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி 3 வாலிபர்கள் பலியானார்கள். கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பியவர்களுக்கு இந்த பரிதாபம் நடந்துளளது.
கலபுரகி: கலபுரகி மாவட்டம் ஜேவர்கி தாலுகா எஸ்.என்.ஹிப்பரகி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஆகாஷ்(வயது 21), சிவு மகேரி(21), லட்சுமண் மலவதி(18). இவர்கள் 3 பேரும் நண்பர்கள் ஆவார்கள். இந்த நிலையில் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் கட்டிசங்கவி என்ற கிராமத்தில் உள்ள எல்லம்மா கோவிலுக்கு 3 பேரும் சென்று இருந்தனர். அங்கு சாமி தரிசனம் செய்துவிட்டு ஊருக்கு திரும்பி சென்றனர். கட்டிசங்கவி கிராமத்தில் உள்ள ஆற்றுப்பாலத்தின் மேல் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் தறிகெட்டு ஓடி சாலையோரம் நின்ற லாரியின் பின்பகுதியில் மோதியது.
இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஆகாஷ், சிவு, லட்சுமண் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து பற்றி அறிந்ததும் அங்கு சென்ற ஜேவர்கி போலீசார் 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து குறித்து ஜேவர்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.